பெருந்துறை அருகே கார்கள் மோதல்:2 பெண்கள் பரிதாப சாவு
பெருந்துறை அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பெருந்துறை
பெருந்துறை அருகே கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
காரில் சென்றனர்
ஈரோடு அருகே உள்ள பெரியசேமூர் பாரதி நகரை சேர்ந்தவர் அலெக்சாண்டர். அவருடைய மனைவி அபிராமி (வயது 34). அதே ஊரை சேர்ந்த அருண்குமார் என்பவரின் மனைவி கனிமொழி(28). இவரும், அபிராமியும் உறவினர்கள் ஆவர்.
இந்த நிலையில் கனிமொழி, அபிராமி அவர்களது உறவினர்கள் பானுமதி (42), பானுமதியின் கணவர் தர்மலிங்கம் (50), அவருடைய மகன் வெற்றிமாறன் (8) ஆகியோருடன் நேற்று மதியம் 2.30 மணி அளவில் பெருந்துறை அருகே ஆயிக்கவுண்டன்பாளையத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர்.
2 பெண்கள் சாவு
காரை தர்மலிங்கத்தின் மற்றொரு மகன் புகழேந்தி (26) என்பவர் ஓட்டினார். இவர்கள் கார் பெருந்துறையில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு வந்ததும் அங்கிருந்து குன்னத்தூர் ரோடு பிரிவில் செல்லாமல் வழி தவறி நெடுஞ்சாலையிலேயே நேராக விஜயமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தது. ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக புகழேந்தி ஓட்டி சென்ற கார் மீது மோதியது.
இந்த விபத்தில் புகழேந்தி ஓட்டி வந்த காரின் பின்புறம் முழுவதுமாக நொறுங்கியது. இதில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி பின்புற இருக்கையில் அமர்ந்து வந்த அபிராமி, கனிமொழி ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தர்மலிங்கம், பானுமதி, வெற்றிமாறன் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். காரை ஓட்டி வந்த புகழேந்தி காயமின்றி உயிர் தப்பினார்.
டிரைவர் கைது
விபத்து பற்றி அறிந்ததும் பெருந்துறை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, படுகாயம் அடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இறந்த 2 பேரின் உடல்களையும் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கோவையை சேர்ந்த விக்ரம் சுதாகர் (45) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.