மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கணவன்-மனைவி பலி

கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

Update: 2023-04-22 16:36 GMT

கலசபாக்கம்

கலசபாக்கம் அருகே மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

கார் மோதியது

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேல் பாலூர் கொல்லக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 40), இவர் ஆரணியில் கோணிப்பை தைக்கும் வேலை செய்து வந்தார்.

இந்தநிலையில் இன்று காலை கார்த்திகேயன் ஆரணியில் வேலைக்கு சென்று விட்டு மாலை தனது மனைவி ராஜேஸ்வரியை (35) மோட்டார்சைக்கிளில் அழைத்து கொண்டு வீட்டுக்கு சென்றார்.

போளூரில் இருந்து செங்கம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் மேல்பாலூர் கிராமத்திற்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது கரூரில் இருந்து வேலூர் நோக்கி செங்கத்தில் இருந்து போளூர் செல்லும் சாலையில் தென்மாதிமங்கலம் கிராமம் அருகே வரும்போது திடீரென கார் நிலை தடுமாறி எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது அதிவேகத்தில் மோதியது.

கணவன்-மனைவி பலி

இதில் மோட்டார் சைக்கிள் சாலையோரம் உள்ள நிலத்தில் தூக்கி வீசப்பட்டு நொறுங்கியது. அதேபோல் காரும் சாலையை விட்டு விவசாய நிலத்தில் இறங்கி நின்றது.

இந்த விபத்தில் கார்த்திகேயன், ராஜேஸ்வரி ஆகியோர் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த கடலாடி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து இறந்த இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவர் வெங்கடேசன் (41) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்