சென்னையில் சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார் - வடபழனி அருகே பரபரப்பு

சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-10-10 23:29 GMT

சென்னை,

சென்னை மண்ணடி பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோதர்ஷா. இவர் முகமது நசீப் என்பவருடன் நேற்று இரவு, வளசரவாக்கத்தில் இருந்து மண்ணடி நோக்கி தனது காரில் சென்று கொண்டிருந்தார். இந்நிலையில், வடபழனி ஆற்காடு சாலை மாநகராட்சி பூங்கா அருகே சென்றபோது, காரில் இருந்து புகை வந்துள்ளது.

இதைப் பார்த்த வாகன ஓட்டி ஒருவர், காரில் தீப்பிடித்துள்ளதாக கோதர்ஷாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து காரில் இருந்த இருவரும் உடனடியாக காரை விட்டு கீழே இறங்கி தீயை அணைக்க முயற்சித்தனர். ஆனால் அதற்குள் தீ மளமளவென பரவியதால், கார் முழுவதும் எரிந்து நாசமானது.

இது குறித்து தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து காரில் பற்றிய தீயை அணைத்தனர். சரியான நேரத்தில் காரை விட்டு கீழே இறங்கியதால், காரில் இருந்த 2 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த தீ விபத்து காரணமாக ஆற்காடு சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்