கோவையில் கார் வெடிப்பு சம்பவம்: கோட்டை ஈஸ்வரன் கோவிலில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேரில் ஆய்வு

கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.;

Update: 2022-10-30 23:44 GMT

கோவை,

கோவை கோட்டைமேடு பகுதியில் கடந்த 23-ந் தேதி கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததில் ஜமேஷா முபின் (வயது 28) என்பவர் உயிரிழந்தார். போலீசார் நடத்திய விசாரணையில் ஜமேஷா முபினுடன் தொடர்பில் இருந்த 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து ஜமேஷா முபின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் 75 கிலோ வெடி மருந்து உள்பட 109 வகையான பொருட்களை கைப்பற்றினர். அவர்களை தனிப்படை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தியதில் பலியான ஜமேஷா முபின் மற்றும் கைதானவர்கள் கோவையில் 3 கோவில்களை தகர்க்க ஒத்திகை பார்த்த அதிர்ச்சி தகவலும் தெரியவந்தது.

இந்த சம்பவம் தொடர்பாக கோவை மாநகர போலீசாரால் அமைக்கப்பட்ட 9 தனிப்படை போலீசார் புலன் விசாரணை நடத்தி வந்தனர். தற்போது இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. என்.ஐ.ஏ. தென் மண்டலங்களுக்கான டி.ஐ.ஜி. வந்தனா தலைமையிலான அதிகாரிகள் கோவையில் முகாமிட்டு போலீசாருடன் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.வுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, இதுவரை விசாரணை நடத்தி வந்த கோவை போலீசார் தாங்கள் சேகரித்த ஆவணங்களை என்.ஐ.ஏ.விடம் ஒப்படைத்தனர்.

கோட்டை ஈஸ்வரன் கோவிலில் ஆய்வு

கோவையில் என்.ஐ.ஏ.வுக்கு அலுவலகம் இல்லாததால் கோவை பி.ஆர்.எஸ். பயிற்சி பள்ளியில் உள்ள ஆயுதப்படை பயிற்சி மையத்தில் என்.ஐ.ஏ.வுக்கு புதிதாக அலுவலகம் ஒதுக்கப்பட்டு உள்ளது. அங்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் போலீசாரிடம் இருந்து பெற்றுக்கொண்ட ஆவணங்கள், தடயங்களை பரிசோதித்து விசாரணையின் ஆரம்ப கட்ட பணிகளை நேற்று தொடங்கினர்.

என்.ஐ.ஏ. விசாரணை தொடங்கிய முதல் நாளான நேற்று காலை 11.45 மணி அளவில் என்.ஐ.ஏ. சூப்பிரண்டு ஸ்ரீஜித் தலைமையில் இன்ஸ்பெக்டர் விக்னேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் கோவை பி.ஆர்.எஸ். மைதானத்தில் இருந்து 2 கார்களில் புறப்பட்டு கார் வெடிப்பு சம்பவம் நடந்த கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதிக்கு வந்தனர். அங்கு கார் வெடிப்பு நடந்த இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது அவர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் மாநகர போலீசார் உடன் இருந்தனர்.

2 மணி நேரம் விசாரணை

பின்னர் கோவிலுக்குள் சென்று ஆய்வு மேற்கொண்டு அங்கு இருந்த பூசாரிகள், நிர்வாகிகளிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டு அறிந்தனர். தொடர்ந்து கோவில் மற்றும் வெளிப்புற பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆய்வை முடித்துக்கொண்டு என்.ஐ.ஏ. அதிகாாிகள் கார்களில் புறப்பட்டு சென்றனர்.

இந்த ஆய்வு மற்றும் விசாரணையானது 2 மணி நேரம் நடந்தது. என்.ஐ.ஏ. விசாரணை நடந்ததால் கோவிலுக்கு செல்லும் சாலையில் போலீசார் இரும்பு தடுப்புகள் வைத்து அடைத்து வாகனங்களை சோதனை செய்த பிறகே அனுமதித்தனர். என்.ஐ.ஏ. விசாரணைக்கு மத்தியில் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் நேற்று வழக்கம்போல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்