கார்-ஆட்டோ மோதல்; 8 பேர் படுகாயம்
தியாகதுருகம் அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
தியாகதுருகம்
தியாகதுருகம் அருகே கண்டாச்சிமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்(வயது 42). கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளியில் டிரைவராக பணிபுரிந்து வரும் இவர் கள்ளக்குறிச்சியில் வாடகை வீட்டில் வசிப்பதற்காக நேற்று முன்தினம் தனது மனைவி, மகன்களுடன் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தார். ஆட்டோவை வெங்கடேசன் ஓட்டினார்.
நாகலூர் அருகே சென்ற போது எதிரே கள்ளக்குறிச்சியில் இருந்து வடபூண்டி நோக்கி வந்த கார் வெங்கடேசன் ஓட்டி வந்த ஆட்டோ மீது மோதி அருகில் வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதியது. இதில் வெங்கடேசன், இவரது மனைவி சுசீலா(32) மகன்கள் நோவா பெஞ்சமின்(10), ஜான் மனோ(7), வில்லியம்(3) மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த வடபூண்டி கிராமத்தை சேர்ந்த முனுசாமி மகன் குணசேகரன்(27), பாவாடை மகன் சரவணன்(27), அய்யாசாமி மகன் ஆகாஷ்(25) ஆகிய 8 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே இவர்களை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் சரவணன் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த விபத்து குறித்து வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் கார் டிரைவர் மீது வரஞ்சரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.