பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-03 17:16 GMT

குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

குப்பை கிடங்கு

திருவண்ணாமலை ஒன்றியத்தில் உள்ள வேங்கிக்கால், அடி அண்ணாமலை, ஆடையூர் ஆகிய ஊராட்சிகளின் குப்பைகளை கொட்ட தேவனந்தல் ஊராட்சியில் புனல்காடு அருகே உள்ள மலையை ஒட்டிய பகுதியில் குப்பை கிடங்கு அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, குப்பை கிடங்கு அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு புனல்காடு அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் ஆடையூர் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நேற்று புனல்காடு பகுதியில் குப்பை கிடங்கு அமைக்கும் பணி நடைபெற்று வந்தது.

சிறைபிடிப்பு

இதை அறிந்த பொதுமக்கள் அந்த இடத்தை சீரமைத்துக் கொண்டிருந்த பொக்லைன் எந்திரங்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவண்ணாமலை வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் மற்றும் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். பின்னர் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள் குப்பை கிடங்கு அமைத்தால் நிலத்தடி குடிநீர் மாசுபடும், சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே இங்கு குப்பை கிடங்கு அமைக்கக்கூடாது என தெரிவித்தனர்.

தொடர்ந்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னர் அங்கு குப்பை கிடங்கு அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் சிறைபிடித்த வாகனங்களை பொதுமக்கள் விடுவித்து அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்