கண்ணாடி பாட்டிலில் ஆவின் பால் விற்க முடியாதா? அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

மதுவை கண்ணாடி பாட்டில்களில் விற்பனை செய்யும்போது ஆவின் பாலை விற்பனை செய்ய முடியாதா? என்று அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது

Update: 2023-07-25 21:43 GMT

சென்னை,

தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், பி.டி.ஆஷா ஆகியோர் கொண்ட சிறப்பு டிவிசன் பெஞ்ச் விசாரித்து வருகிறது.

விசாரணையின்போது, ஆவின் பாலை பாக்கெட்டுகளில் அடைத்து விற்பதற்கு பதில் கண்ணாடி பாட்டிலில் அடைத்து விற்றால் பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்க்கப்படும். எனவே ஆவின் பாலை பாட்டிலில் அடைத்து விற்க முடியுமா? என்று ஆவின் நிறுவனத்துக்கு நீதிபதிகள் ஏற்கனவே கேள்வி எழுப்பியிருந்தனர்.

மக்கள் கருத்து

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஆவின் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், ஆவின் பாலை பாக்கெட்டுகளில் இருந்து பாட்டிலுக்கு மாற்றலாமா? என்று பொதுமக்களிடம் கருத்து கேட்கப்பட்டது. இதற்கு சரியான ஆதரவு கிடைக்கவில்லை. எனவே ஆவின் பாக்கெட்டுக்கு பதில் கண்ணாடி பாட்டில் பயன்படுத்த முடியாது என்று கூறப்பட்டு இருந்தது.

ஏன் முடியாது?

இதை கேட்ட நீதிபதிகள், அரசு வக்கீலை பார்த்து, "டாஸ்மாக் மட்டும் மதுவை பாட்டிலில் விற்கும் போது ஆவின் பாலை ஏன் விற்க முடியாது? டாஸ்மாக் பாட்டிலை வாங்கிய மதுபிரியர்கள் குடித்து விட்டு ஆடி கொண்டே பாட்டிலை கையாளும் போது சாதாரண மக்களால் ஏன் அதை கையாள முடியாது?

எனவே ஆவின் நிறுவனத்தின் அறிக்கை ஏற்க முடியாது. எனவே மீண்டும் ஆலோசனை நடத்தி புதிய அறிக்கையை அடுத்த வாரம் தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்