3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கேட்க முடியாது: அரசு உத்தரவு சரிதான் என்று ஐகோர்ட்டு தீர்ப்பு

3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கோர முடியாது என்றும், இதுதொடர்பான விண்ணப்பங்களை நிராகரித்து அரசு அதிகாரிகள் பிறப்பித்த உத்தரவு சரிதான் என்றும் சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.

Update: 2023-08-28 20:47 GMT

சென்னை,

ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை ஒருவர், 3-வது பிரசவத்துக்காக பேறுகால விடுப்பு கேட்டு விண்ணப்பித்தார். ஆனால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டும் பேறுகால விடுப்பு வழங்கப்படும். 3-வது பிரசவத்துக்கு வழங்கப்படாது என்று உத்தரவிடப்பட்டது. அதை எதிர்த்து அந்த ஆசிரியை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் என்.மனோகரன் ஆஜராகி கூறியதாவது:-

'மனுதாரர் ஆசிரியையாக பணியில் சேருவதற்கு முன்பு திருமணமாகி, 2 குழந்தைகளும் பிறந்துவிட்டனர். அவரது கணவர் 2004-ம் ஆண்டு இறந்துவிட்டார்.

மறுமணம்

அதன்பின்னர் ஆசிரியை பணியில் சேர்ந்த மனுதாரர், மறுமணம் செய்துகொண்டார். அதைத் தொடர்ந்து அவர் கர்ப்பம் ஆனார். அவருக்கு கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் 1-ந் தேதி இரட்டைக்குழந்தைகள் பிறந்தன. அவர் பேறுகால விடுப்பு கேட்டு, 2022-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி செய்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களுக்கான அடிப்படை விதியை கல்வி அதிகாரி தவறாக புரிந்துகொண்டார். 1961-ம் ஆண்டு பேறுகால பலன்கள் சட்டம், அரசியல் அமைப்பு சாசனத்தின் அடிப்படையில் இயற்றப்பட்டது. பேறுகால சட்டம் என்பது நலச்சட்டமாகும். அந்த சட்டத்தில், இதுபோல 3-வது பிரசவத்துக்கு விடுப்பு வழங்க முடியாது என்று கூற முடியாது.'

இவ்வாறு அவர் வாதிட்டார்.

தகுந்த உத்தரவு

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், 'பேறுகால விடுப்பு குறித்து அரசு அவ்வப்போது தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்கிறது. தமிழ்நாடு பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்துறை கடந்த 2016 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் அரசாணைகளை பிறப்பித்துள்ளது. அதன்மூலம், 2 குழந்தைகள் பிரசவத்துக்கு மட்டுமே பேறுகால விடுப்பு வழங்க முடியும். மேலும், அரசு ஊழியர்களுக்கு அடிப்படை விதிகள் மட்டுமே பொருந்தும். இந்த விதிகளின்படி, மனுதாரருக்கு 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு வழங்க முடியாது. இதுதொடர்பாக ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்சும் தீர்ப்பு அளித்துள்ளது' என்று வாதிட்டார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி என்.சதீஷ்குமார் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

4 குழந்தைகள்

அரசு பெண் ஊழியர்களுக்கு 2 குழந்தைகள் பிரசவிக்க மட்டுமே பேறுகால விடுப்பு கண்டிப்பாக வழங்கப்படும் என்று விதிகள் உள்ளன. அதுவும் 365 நாட்களுக்கு மேல் விடுப்பு வழங்க முடியாது. இந்த விவகாரத்தில் அரசு ஒரு கொள்கை முடிவு எடுத்த பின்னர், அதை மீறி 3-வது பிரசவத்துக்கு மனுதாரர் விடுப்பு கோர முடியாது.

மேலும், 3-வது குழந்தையை பெற்றெடுப்பதை தடுக்கும்விதமாக இதுபோன்ற விதிகளை கொண்டுவந்துள்ள நிலையில், மனுதாரர் தற்போது 4 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அதனால், மனுதாரர் 3-வது குழந்தை பெற்று எடுக்க விடுப்பு கோர முடியாது. இவரது விண்ணப்பத்தை நிராகரித்தது சரிதான். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.

தள்ளுபடி

இதேபோல சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு ஆசிரியையும் 3-வது பிரசவத்துக்கு பேறுகால விடுப்பு கேட்டு கொடுத்த விண்ணப்பத்தை அதிகாரிகள் நிராகரித்துவிட்டனர். அதை எதிர்த்து அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி என்.சதீஷ்குமார், 'மனுதாரர் பணியில் சேருவதற்கு முன்பே 2 குழந்தைகளை பெற்றுவிட்டார். தற்போது பணியில் சேர்ந்த பின்னர், 3-வது குழந்தைக்காக பேறுகால விடுப்பு கேட்டுள்ளார். சுப்ரீம் கோர்ட்டு பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த தீர்ப்பின்படி, 2 குழந்தைகளுக்கு மேல் பேறுகால விடுப்பு கோர முடியாது. எனவே, அவருக்கு பேறுகால விடுப்பு வழங்க மறுத்த உத்தரவு சரிதான். அதில் தலையிட முடியாது. வழக்கை தள்ளுபடி செய்கிறேன்' என்று தீர்ப்பு அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்