சென்னையில் குப்பை லாரிகளை இயக்கும் நேரத்தை நிர்ணயம் செய்ய முடியாது - ஐகோர்ட் திட்டவட்டம்
குப்பை லாரிகளை இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்று நேர நிர்ணயம் செய்ய முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது.;
சென்னை,
சென்னை மாநகரில் குப்பை லாரிகள் காலை நேரங்களில் இயக்கப்படுவதால் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களும், அலுவலகங்களுக்கு வேலைக்குச் செல்வோரும் பாதிக்கப்படுவதாகவும், இதனால் காலை 7 முதல் 10 மணி வரையும், மாலை 4 முதல் 7 மணி வரையும் குப்பை லாரிகளை இயக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும் எனக்கோரி சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார்.
மேலும் அந்த மனுவில், பள்ளி மற்றும் அலுவலகம் செல்லும் நேரங்களில் குப்பை லாரிகளை சாலைகளில் நிறுத்தி வைப்பதால் பெரும் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்படுவதாகவும், வெளிநாடுகளில் இரவு நேரங்களில் குப்பை லாரிகள் இயக்கப்படுவதைப் போல் சென்னையிலும் இரவு நேரங்களில் குப்பை லாரிகளை இயக்கினால் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் இருக்காது என மனுதாரர் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், குப்பை லாரிகளை இந்த நேரத்தில் தான் இயக்க வேண்டும் என்று நேர நிர்ணயம் செய்ய முடியாது என்று தெரிவித்து இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.