பறக்கை வட்டாரத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி அறுவடை தொடங்கியது
குளத்து பாசனத்தை நம்பிய சுசீந்திரம், பறக்கை சுற்று வட்டாரத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி அறுவடை தொடங்கியது.;
நாகா்கோவில்:
குளத்தை பாசனத்தை நம்பிய சுசீந்திரம், பறக்கை சுற்று வட்டாரத்தில் கன்னிப்பூ நெல் சாகுபடி அறுவடை தொடங்கியது.
கன்னிப்பூ சாகுபடி
குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ ஆகிய இருபோக நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது. கன்னிப்பூ சாகுபடியான தற்போது சுமார் 4 ஆயிரத்து 500 ஹெக்டர் பரப்பளவில் நெல்லை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். பேச்சிப்பாறை அணை தண்ணீரை நம்பியே ஒவ்வொரு ஆண்டும் பயிரிடப்படுவது வழக்கம்.
இதேபோல இந்த ஆண்டும் கன்னிப்பூ நெல் சாகுபடிக்காக ஜூன் 1-ந் தேதி பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் அணையில் தண்ணீர் திறக்கப்பட்டு பல நாட்கள் ஆன நிலையிலும் கடை வரம்பு பகுதிக்கு தண்ணீர் வரவில்லை. இதனால் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தினர். அதே சமயத்தில் தென்மேற்கு பருவமழையும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாமல் ஏமாற்றியது. கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் 62 சதவீத மழை குறைவாக பெய்தது. இதனால் அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது.
அறுவடை தொடங்கியது
அதே சமயத்தில் இருபோக சாகுபடியின் போது சுசீந்திரம், பறக்கை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வயல்கள் குளத்து பாசனத்தை நம்பியே பயிரிடப்படுவதால் குளத்து தண்ணீர் இருப்பை பொறுத்து மாவட்டத்தில் மற்ற இடங்களில் சாகுபடி தொடங்குவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே இங்கு சாகுபடி தொடங்கி விடும். இதன் காரணமாக சுசீந்திரம் மற்றும் பறக்கை சுற்று வட்டார பகுதியில் அறுவடையானது முன்கூட்டியே தொடங்கிவிடும். சுசீந்திரம் பகுதியில் சுசீந்திரம் பெரிய குளம் மூலமாகவும், பறக்கை மற்றும் பால்குளம் பகுதியில் பறக்கை பெரியகுளம் மூலமாகவும் விவசாய பணிகள் நடக்கிறது. தோவாளை மற்றும் அனந்தனார் கால்வாய் மூலம் பாசன வசதி பெறும் வயல் பரப்புகள் அறுவடை தாமதமாகும்.
இந்த நிலையில் சுசீந்திரம் மற்றும் பறக்கை பகுதிகளில் கன்னிப்பூ அறுவடை பணி தொடங்கியுள்ளது. பல இடங்களில் நேற்று அறுவடை நடந்தது. நெல் அறுக்கும் எந்திரம் மூலமாக விவசாயிகள் அறுவடை செய்ததை காண முடிந்தது. மேலும் தற்போது வெயில் அடித்து வருவதால் வைக்கோலுக்கும் நல்ல விலை கிடைக்கும் என்று எதிா்பார்க்கப்படுகிறது. நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தண்ணீர் திறப்பு
தற்போது அறுவடையானது சுமார் ஆயிரம் ஹெக்டர் அளவுக்கு மட்டுமே தொடங்கப்பட்டுள்ளது. இன்னும் 3 ஆயிரத்து 500 ஹெக்டர் அளவுக்கு நெல் பயிர்களை அறுவடை செய்ய இன்னும் ஒரு மாதம் வரை ஆகும். அதுவரையில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் தேவைப்படுகிறது. தற்போது அணைகளில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளதால் தொடர்ந்து மழை பெய்தால் மட்டுமே நெற்பயிர்களை காப்பாற்ற முடியும் என கால்வாய் பாசன விவசாயிகள் கவலையில் உள்ளனர்.