பலா மரங்களை வெட்ட வழங்கிய அனுமதி ரத்து

வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பால், கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்ட வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.;

Update:2023-10-18 01:45 IST

வன ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பால், கோத்தகிரி அருகே தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்ட வழங்கிய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது.

பலா மரங்கள்

கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் மாமரம் கிராமத்தில் உள்ள தனியார் எஸ்டேட் நிர்வாகம், அங்கு வளர்ந்துள்ள 166 பலா மரங்களை வெட்ட அனுமதி கோரி மாவட்ட நிர்வாகத்தின் மரம் வெட்ட அனுமதி வழங்கும் குழுவிடம் விண்ணப்பித்தது. அதற்கு கடந்த ஜூலை 30-ந் தேதி மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து அங்கு மரங்களை வெட்டி அகற்றும் பணி நடந்து வந்தது. இதற்கு வன ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் அப்பகுதி காட்டு யானைகளின் பிரதான வாழ்விடமாக உள்ளது. அங்குள்ள பழ மரங்களை வெட்டி அகற்றினால், யானைகள் உணவு தேடி கிராமங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து மனித-வனவிலங்கு மோதல் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, வனவிலங்குகள் உணவுக்காக நம்பியுள்ள மரங்களை அகற்ற வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் அனுமதி வழங்கக்கூடாது. பலா மரங்களை வெட்ட அனுமதி வழங்கியதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

அனுமதி ரத்து

இதையடுத்து தனியார் எஸ்டேட்டில் பலா மரங்களை வெட்டுவதற்கான அனுமதியை வனத்துறையினர் தற்காலிகமாக ரத்து செய்து நிறுத்தி வைத்து உள்ளனர். இதனால் வன ஆர்வலர்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர். இதுகுறித்து நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம் கூறுகையில், மாமரம் பகுதியில் உள்ள தனியார் எஸ்டேட்டில் காபி செடிகளுக்கு நிழல் தரும் மரங்களாக பலா மரங்கள் நடவு செய்து வளர்த்து உள்ளனர். தற்போது அந்த மரங்களை வெட்ட அனுமதி கோரினர். தனியார் நிலத்தில் நட்டு வளர்க்கப்படும் மரங்கள் என்பதால், அதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. ஆனால், அதற்கு வன ஆர்வலர்கள் மற்றும் பசுமை ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மரங்களை வெட்ட அளிக்கப்பட்ட அனுமதி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்