தேர்தலின் போது வழங்கிய போலி சாதி சான்று ரத்து

தோளப்பள்ளி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றவர் வழங்கிய போலி சாதி சான்று ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை வீட்டுக்கதவில் ஒட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.;

Update: 2023-06-29 16:17 GMT

போலி சாதி சான்று

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த தோளப்பள்ளி ஊராட்சியில் கடந்த 2021-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் சுரேஷ் என்பவரின் மனைவி கல்பனா பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்

இவரை எதிர்த்து போட்டியிட்ட பாக்கியராஜ் உள்ளிட்டவர்கள் கலெக்டர், தேர்தல் கமிஷன் மற்றும் ஊரக வளர்ச்சி அதிகாரிகளிடம் புகார் கொடுத்தனர். அந்த புகாரில் தோளப்பள்ளி ஊராட்சிமன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற கல்பனா எஸ்.சி. வகுப்பை சேர்ந்தவர் இல்லை. போலியாக எஸ்.சி. சான்று வாங்கி கொடுத்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். அவர் வெற்றிபெற்றதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

ரத்து

இதுகுறித்து, ஊரக வளர்ச்சி, வருவாய்த் துறை, காவல்துறை உள்ளிட்ட துறையினரை கொண்ட மாவட்ட விழிக்கண் பார்வை குழு அமைத்து விசாரிக்கும்படி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டார். மேலும், கல்பனா கொடுத்த சாதி சான்றின் உண்மை தன்மையை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி வருவாய்த் துறையினருக்கு உத்தரவிட்டார்.

அதன்படி நடத்திய விசாரணையில் கல்பனா கொடுத்த சாதி சான்று போலியானது என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, முறைகேடாக பெற்ற சாதி சான்றை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

கதவில் ஒட்டினர்

பின்னர், தாசில்தார் வேண்டா உத்தரவின்படி, மண்டல துணை தாசில்தார் பிரகாஷ் ஆலோசனையின் பேரில் வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி, கிராமநிர்வாக அலுவலர் குபேந்திரன் மற்றும் கிராம உதவியாளர்கள் தோளப்பள்ளி கிராமத்திற்கு சென்று சாதி சான்று ரத்தான உத்தரவை கல்பனாவிடம் கொடுக்க சென்றனர்.

அப்போது அவர் வீட்டில் இல்லாததால் அதிகாரிகள் சாதி சான்று ரத்தான உத்தரவை வீட்டு கதவில் ஒட்டி விட்டு சென்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர் சுதாகரன் கூறுகையில் சாதி சான்று ரத்து செய்யப்பட்ட விவரம் தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் தான் முடிவு செய்வார்கள் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்