பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் சிக்கல்
பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பாசன நீர் பெருமளவு வீணாகும் அபாயம் உள்ளது.
பி.ஏ.பி. பாசன வாய்க்கால்கள் தூர் வாருவதில் ஏற்பட்டுள்ள சிக்கலால் பாசன நீர் பெருமளவு வீணாகும் அபாயம் உள்ளது.
நீர் இழப்பு
குடிமங்கலம் வட்டாரத்தில் பி.ஏ.பி. திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையே தண்ணீர் கிடைக்கும் நிலையில், நடப்பு ஆண்டு பாசனம் பெறும் விவசாயிகளுக்கு தண்ணீர் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பாசனக் கால்வாய்கள் தூர்வாரப்படாததால் புதர் மண்டிக்கிடக்கிறது.
இதனால் பெருமளவு நீர் இழப்பு ஏற்படுவதுடன், கடைமடைக்கு நீர் சென்று சேர்வதில் சிக்கல் உள்ளது. எனவே பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வாரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சிக்கல்
ஒவ்வொரு முறையும் நீர் திறப்புக்கு முன் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படும். கடந்த ஆட்சிக்காலத்தில் குடிமராமத்து திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியின் மூலம் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டன. ஆனால் தற்போது அந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. பொதுப்பணித்துறை அதிகாரிகள் நிதி இல்லை என்று காரணம் காட்டி ஒதுங்கிக்கொள்கின்றனர்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டப் பணியாளர்கள் மூலம் தூர்வாரிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால் அது குறித்து அரசாணை வெளியிடப்பட்ட நிலையிலும் பணிகள் மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம்
100 நாள் வேலைத்திட்டப் பணியாளர்களுக்கு மண் வாய்க்கால்களை மட்டுமே தூர்வார அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக ஊரக வளர்ச்சித்துறையினர் தெரிவிக்கின்றனர். குடிமங்கலம் வட்டாரத்தில் காங்கிரீட் வாய்க்கால்களே உள்ளன. இதனால் இதுவரை தூர்வாரும் பணிகள் தொடங்காததால் பாசன வாய்க்கால்கள் புதர்மண்டிக் கிடக்கின்றன. தற்போது காண்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் 15 நாட்களில் பாசனத்துக்கு நீர் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
அதேநேரத்தில் திருமூர்த்தி அணையிலும் பி.ஏ.பி. தொகுப்பணைகளிலும் நீர் இருப்பு குறைவாகவே உள்ளதால் ஒரு சுற்று அல்லது 2 சுற்று தண்ணீர் கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே பாசன வாய்க்கால்களை உடனடியாக தூர்வார வேண்டும். இது குறித்து பாசன சபைகள் மூலம் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். தற்போது குடிமங்கலம் பகுதியில் கடும் வறட்சி நிலவி வரும் நிலையில், இந்த பாசன நீரானது பயிர்களுக்கும் கால்நடைகளுக்கும் உயிர் நீராகவே பயன்பட உள்ளது.
நடவடிக்கை
இன்றையசூழ்நிலையில் பலவிதமான சிக்கல்களால் விவசாயிகள் தவித்து வருகின்றனர். இந்தநிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடைக்கும் உயிர் நீர் முறையாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.