பட்டா நிலத்தில் உடலை அடக்கம் செய்ய முடியுமா? 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்றம்
பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியுமா? என்பது குறித்து 3 நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்றி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
திருவள்ளூர் மாவட்டம் நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு. இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், "எங்களது கிராமத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தனியாக மயானம் உள்ளது. ஆனால் ஜெகதீஸ்வரி என்பவர் இறந்த தனது கணவரின் உடலை சட்டவிரோதமாக அவரது பட்டா நிலத்தில் அடக்கம் செய்துள்ளார். எனவே அந்த உடலை தோண்டியெடுத்து மயானத்தில் மீண்டும் அடக்கம் செய்ய கலெக்டருக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, பஞ்சாயத்து சட்டப்படி பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்ய முடியாது எனக்கூறி அந்த உடலை தோண்டியெடுத்து மயானத்தில் அடக்கம் செய்ய உத்தரவிட்டிருந்தார்.
முழு அமர்வு
இந்த உத்தரவை எதிர்த்து ஜெகதீஸ்வரி, சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, மயானமாக அறிவிக்கப்படாத பகுதிகளில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய தமிழ்நாடு கிராம பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி எந்த தடையும் இல்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்த பாபு தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பட்டா நிலத்தில் இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியுமா? என்பது குறித்து 3 நீதிபதிகளை கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டனர்.