குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஏலம் விடப்படுமா?

அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

Update: 2023-01-29 18:45 GMT

தமிழ்நாட்டில் போலீஸ் நிலையங்கள், கலெக்டர் அலுவலகங்கள், கோர்ட்டு வளாகங்கள் போன்ற இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் குவியல் குவியலாக பழைய வாகனங்கள் நீண்ட காலமாக நிறுத்தப்பட்டு கிடப்பதை பார்க்கலாம்.

புழுதி படிந்து, துருப்பிடித்து இனி எதற்குமே லாயக்கற்ற நிலையில் அவை கிடக்கும். செடி கொடிகள் சுற்றிலும் முளைத்து நிற்பதுடன் விஷப் பூச்சிகளும் உள்ளே குடியிருக்க ஏதுவாக இருக்கும்.

கவலை இல்லை

இவைகளை ஏன் இப்படி போட்டு இருக்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும். அவைகள் எல்லாம் வழக்குகளில் தொடர்புடையன என்பார்கள். வழக்கு முடியும்வரை மனிதர்கள் இருக்கலாம் வாகனங்கள் உருப்படியாக இருக்க வேண்டுமே?.

அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படுவது இல்லை. பெரிய பெரிய அதிகாரிகள் எல்லாம் அவைகளை கடந்துதான் தினமும் போவார்கள். அவைகளை பைசல் செய்து யாருக்காவது பயன்படச் செய்யலாம் அல்லவா?. இப்படித்தான் அனைவருக்கும் நினைக்கத் தோன்றுகிறது.

வாகனங்கள் ஏலம்

இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பல அரசு அலுவலக வளாகங்களில் துருப்பிடித்த, உடைந்துபோன பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அடிக்கடி காண முடிகிறது. இதுபோன்ற வாகனங்களை சீக்கிரம் அப்புறப்படுத்துவதற்கான வழிகளை காண முயற்சிக்க வேண்டும். அப்படி அப்புறப்படுத்தினால் கூடுதல் வாகனங்களை நிறுத்த இடம் கிடைப்பதோடு, அரசுக்கு வருவாயும் வந்து சேரும். அமலாக்கத் துறைகளின் அலுவலகங்களில், கைப்பற்றப்பட்ட வாகனங்கள் அனைத்தும் அதுதொடர்பான வழக்கு விசாரணையின் முடிவுக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

இதுபோன்ற நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட அதிகாரியின் ஒப்புதலை பெற வேண்டும். அந்த வாகனங்களை ஏலத்தில் எடுப்பதற்கு யாருமே முன்வர மாட்டார்கள். ஆனாலும் அவற்றுக்கு யாருமே வாங்க முடியாத விலையை நிர்ணயிக்கின்றனர். எனவே அவை தொடர்ந்து கடுமையான மழை, வெயிலில் கிடந்து விரைவில் பழுதாகி விடுகின்றன. இதுபோன்ற வாகனங்களால் அரசுக்கு குறைந்த வருமானமே வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள், அதுபோன்ற வாகனங்களின் நிலைக்கு ஏற்ற விலையை நிர்ணயித்து அவற்றை விரைவில் ஏலம் மூலம் விற்பனை செய்ய வேண்டும். இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்து பொதுத்துறை செயலாளருக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.

திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அலுவலகங்களில் பயன்பாடு இல்லாத வாகனங்கள் ஏராளமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் விபத்தில் சிக்கும் வாகனங்கள், அதிக பாரம் ஏற்றிச்செல்லும் வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் ஆகியவற்றை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் பறிமுதல் செய்கிறார்கள். பின்னர் வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். வழக்கு முடிந்ததும் வாகனங்கள் சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

குவிந்து கிடக்கும் வாகனங்கள்

சில நேரங்களில் வழக்கு முடிந்தும் வாகனங்களை சிலர் எடுத்துச்செல்லாமல் இருப்பார்கள். அவர்களின் வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பயன்பாடு இன்றி கிடக்கும். மேலும் மாவட்டம் முழுவதும் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்கின்றனர். இந்த வாகனங்களை பொது ஏலம் மூலம் அவ்வப்போது விற்பனையும் செய்கின்றனர். ஆனாலும் போலீஸ் நிலையங்களில் மோட்டார் சைக்கிள், கார், சரக்கு வாகனம் உள்ளிட்டவைகள் குவிந்து கிடக்கின்றன. ஒரு சில போலீஸ் நிலையங்களில் வாகனங்களை நிறுத்த இடம் இல்லாமல் ஒன்றின் மீது ஒன்றை அடுக்கி வைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒரு கார் அந்தரத்தில் தொங்குவது போல் மற்றொரு கார் மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகராட்சிக்கு சொந்தமான 2 தண்ணீர் லாரிகள் குமரன் பூங்கா அருகே கேட்பாரற்று கிடக்கின்றன. இதுபோன்று இல்லாமல் கிடக்கும் வாகனங்களை அழிக்கலாம் அல்லது பொதுமக்களுக்கு குறைந்த தொகைக்கு ஏலம் விட்டு விற்பனை செய்யலாம் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

375 வாகனங்கள் ஏலம்

இதுகுறித்து போலீசாரிடம் கேட்ட போது, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த ஆண்டு பல்வேறு வழக்குகளில் மொபட், ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள்கள் உள்பட மொத்தம் 375 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வாகனங்கள் அனைத்தையும் திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் வைத்து ஏலம் விடப்பட்டது. இதில் 349 வாகனங்களை பொதுமக்கள் ஏலத்தில் வாங்கினர். இதன் மூலம் ரூ.18 லட்சத்து 97 ஆயிரத்து 794 வருமானமாக கிடைத்தது. ஆனால் 26 வாகனங்களை யாரும் ஏலத்தில் வாங்கவில்லை. இதுபோன்று ஏலம் போகாத மற்றும் விற்பனை செய்ய இயலாத நிலையில் உள்ள வாகனங்கள் மட்டுமே தற்போது போலீஸ் நிலையங்களில் உள்ளன என்றனர்.

அரசு அலுவலகங்கள், போலீஸ் நிலையங்களில் நிறுத்தி வைக்கப்படும் வாகனங்கள் குறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-

வாகன புழக்கம்

அழகர்ராஜ் (சமூக ஆர்வலர், திண்டுக்கல்) :- கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு வாகன பயன்பாடு அவ்வளவாக இல்லை. அனைவரும் சைக்கிளை பயன்படுத்தினர். இதனால் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைத்தது. ஆனால் தற்போது பக்கத்து தெருவுக்கு செல்ல வேண்டும் என்றால் கூட மோட்டார் சைக்கிளில் தான் செல்கின்றனர். அந்த அளவுக்கு அனைவரின் வீடுகளிலும் மோட்டார் சைக்கிள்கள், கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் தற்போது இருக்கின்றன.

இதனால் வாகன புழக்கமும் அதிகரித்துள்ளது. அதே நேரம் ஆயுள் காலம் முடிந்த வாகனங்களை மறுசுழற்சி செய்ய எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படுவதில்லை. அவை சாலையோரங்களில் யாரும் உரிமை கோராத வாகனங்களாக கிடக்கின்றன. இந்த வாகனங்களால் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அவற்றை அழித்து மறுசுழற்சி செய்ய உரிய தொழில்நுட்பம் செயல்படுத்தப்பட வேண்டும்.

மறுசுழற்சி செய்ய முடியாத நிலை

சரவணக்குமார் (வக்கீல், திண்டுக்கல்) :- சாலைகளில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்கள், போலீஸ் நிலையங்களில் குவிந்து கிடக்கும் வாகனங்கள் ஆகியவற்றில் பேட்டரிகள் ஓரளவு செயல் இழக்காமல் இருக்கும். சில நேரங்களில் பேட்டரியில் உள்ள திராவகம் கசிய தொடங்கும். அப்போது திராவகம் பட்டு வாகனங்களின் பெயிண்ட் கரையும். மேலும் என்ஜின் உள்ளிட்ட பிற உதிரிபாகங்களும் திராவகத்தால் சேதமடையும் வாய்ப்புள்ளது.

ஒருகட்டத்தில் திராவகம், வாகனங்களின் பெயிண்ட் ஆகியவை மண்ணில் சேர்வதால் மண்வளமும் பாதிக்கப்படும். மேலும் வாகனங்களையும் மறுசுழற்சி செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே வழக்குகள் முடியும் வரை வாகனங்களை பாதுகாப்பாக வைக்க மாற்று ஏற்பாடு செய்யலாம். அதேபோல் கைவிடப்பட்ட நிலையில் சாலையோரங்களில் கிடக்கும் வாகனங்களை அகற்றி அழிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வாழ்க்கை தரம் மேம்படும்

ராஜேந்திரன் (ஒர்க் ஷாப் உரிமையாளர், திண்டுக்கல்):- அரசு அலுவலகங்கள் மற்றும் பிற துறை அலுவலகங்களில் பயன்பாடு இன்றி கிடக்கும் வாகனங்களை ஒரே இடத்தில் குவியலாக போடுவதால் யாருக்கும் பலன் இல்லை. மாறாக அதனை உரிய காலத்தில் ஏலத்தில் விட நடவடிக்கை எடுக்கலாம். இதன் மூலம் அரசுக்கும் வருமானம் கிடைக்கும். அந்த வாகனங்களை ஏலம் எடுப்பவர்கள் அவற்றை சரிசெய்ய எங்களை போன்ற தொழிலாளிகளை நாடுவார்கள். இதனால் ஒர்க் ஷாப் தொழிலை நம்பியுள்ள பலரின் வாழ்க்கை தரம் மேம்படும்.

கணேசன் (ஆட்டோ டிரைவர், பழனி):- விபத்து மற்றும் விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டியதற்காக ஏராளமான வாகனங்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்படுகின்றன. இந்த வாகனங்களில் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தும் வாகனங்களை தவிர்த்து வாடகைக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் உரிமையாளர்கள் அந்த வாகனங்களை நம்பியே வாழ்க்கை நடத்துகின்றனர். வழக்கு காரணமாக பல ஆண்டுகள் போலீஸ் நிலையங்களில் திறந்த வெளியில் கிடக்கும் வாகனங்கள் பெரும்பாலானவை துருப்பிடித்த நிலையில் இருக்கின்றன. வழக்கை முடித்து வைத்து அந்த வாகனங்களை அவர்கள் மீட்டுச்சென்றாலும் மீண்டும் பழைய நிலைக்கு வாகனங்களை மாற்ற பணம் அதிகமாக செலவாகும். எனவே முடிந்தவரை வாகனங்களை விரைவாக உரிமையாளர்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்