வீதியில் கிடந்து வீணாகலாமா...? சிக்னல் கம்பங்கள்

வீதியில் கிடந்து வீணாகலாமா...? சிக்னல் கம்பங்கள்

Update: 2022-10-30 18:45 GMT

கோவை மாநகர பகுதியில் முக்கிய சாலையாக அவினாசி சாலை, திருச்சி சாலை, சத்தி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலை ஆகிய சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள்.

சிக்னல் கம்பங்கள்

இந்த நிலையில் கோவை அவினாசி சாலையில் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருவதால் அங்கு போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதை தடுக்க போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அத்துடன் மேம்பால பணிகள் காரணமாக பல இடங்களில் உள்ள சிக்னல் கம்பங்கள் அகற்றப்பட்டு உள்ளன.

இதேபோன்று கோவை திருச்சி சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்தபோது ராமநாதபுரம் சிக்னல் பகுதியில் இருந்த கம்பங்கள் அகற்றப்பட்டன. பின்னர் அவை அங்குள்ள சாலையோரத்தில் போடப்பட்டன. இதுவரை அந்த கம்பங்கள் அகற்றப்படவில்லை என்பதால், தற்போது அந்த கம்பங்கள் மற்றும் சிக்னல் விளக்குகள் வீணாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

வீணாக கிடக்கிறது

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கோவை மாநகர பகுதியில் தற்போது போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் இடங்களில் புதிதாக சிக்னல்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ராமநாதபுரத்தில் பயன்படுத்தக்கூடிய சிக்னல் கம்பங்கள் யாருக்கும் பயன் இல்லாமல் வீணாக கிடக்கிறது. இந்த கம்பங்களை அங்கிருந்து அகற்றி தேவையான பகுதியில் வைத்தால் உதவியாக இருக்கும்.

அகற்ற வேண்டும்

மேலும் ராமநாதபுரம் சந்திப்பு பகுதியில் சிக்னல் அருகே மேம்பாலத்தின் கீழ் சாலையின் நடுவே உள்ள தடுப்புச்சுவரிலும் இந்த சிக்னல் கம்பங்கள் வீணாக கிடக்கிறது. இவை எந்த நேரத்திலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. எனவே வீணாக கிடக்கும் இதுபோன்ற சிக்னல் கம்பங்களை அகற்றி அவற்றை முறையாக பயன்படுத்த வேண்டும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்