குற்றவாளிகள் மலைப்பகுதியில் பதுங்கலா?

ஆரல்வாய்மொழியில் செங்கல்சூளை அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மலைப்பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-06-11 19:48 GMT

ஆரல்வாய்மொழி:

ஆரல்வாய்மொழியில் செங்கல்சூளை அதிபர் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகள் மலைப்பகுதியில் பதுங்கி உள்ளார்களா? என தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

செங்கல்சூளை அதிபர் கொலை

ஆரல்வாய்மொழி கிறிஸ்துநகரை சேர்ந்தவர் ஏசுதாசன் (வயது 62). அந்த பகுதியில் செங்கல்சூளை நடத்தி வந்தார். இவரை கடந்த 9-ந் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த ரவுடி அன்பு என்கிற அன்பழகன் (29) முன்விரோதம் காரணமாக தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து குத்தி கொலை செய்தார். கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக இந்த ெகாலை நடந்ததாக தெரிகிறது.

இது சம்மந்தமாக அன்பு (எ) அன்பழகன், ஆரல் கிறிஸ்து நகரை சேர்ந்த விஜயன், திருப்பதிசாரத்தை சேர்ந்த மணிகண்டன், மிஷன் காம்பவுண்டை சேர்ந்த தங்கஜோஸ் ஆகியோர் மீது ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மலைப்பகுதியில் தேடுதல் வேட்டை

இதற்கிடையே குற்றவாளிகள் 4 பேரும் தலைமறைவானார்கள். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர் கோபி, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆறுமுகம், மகேஷ்வரராஜ், சரவணன், சனல்குமார் ஆகியோர் தலைமையில் 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தனித்தனியாக பிரிந்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

இந்தநிலையில் இந்த வழக்கில் தேடப்பட்ட 4 பேரில் ஒருவர் நாகர்கோவில் பகுதியில் உள்ள ஒரு மலையில் இரவில் பதுங்கியிருந்த போது போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை பார்த்ததும் அவர் தப்பி ஓடினார். தொடர்ந்து 30-க்கும் மேற்பட்ட போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி அவரை பிடித்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதேபோல் மற்ற 3 பேரும் வெவ்வேறுமலை பகுதிகளில் பதுங்கியிருக்கலாம் என கருதப்படுகிறது. எனவே மலை பகுதியில் இரவு பகலாக போலீசார் தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்