ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்

பொதுமக்கள் அஞ்சலகங்கள் மற்றும் தபால்காரர்கள் மூலம் ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-22 10:26 GMT

பொதுமக்கள் அஞ்சலகங்கள் மற்றும் தபால்காரர்கள் மூலம் ரூ.10 லட்சத்திற்கான விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஆர்.அமுதா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

விபத்து காப்பீட்டு திட்டம்

அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி, டாடா ஏ.ஐ.ஜி. ஜெனரல் இன்சூரன்ஸ் மற்றும் பஜாஜ் அலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்களுடன் இணைந்து ஆண்டிற்கு ரூ.399 மற்றும் ரூ.396 பிரீமியத்தில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீட்டு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

சாமானிய மக்களுக்கு விபத்து காப்பீட்டு திட்டங்களின் பலன்கள் சென்றடையும் வகையில் அஞ்சலகங்கள் மூலம் மிக குறைந்த பிரீமியம் தொகையுடன் கூடிய இந்த விபத்து காப்பீட்டு திட்டம் செய்யப்படுத்தப்படுகிறது.

அனைத்து அஞ்சலகங்களிலும் இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

18 வயது முதல் 65 வயது வரை உள்ளவர்கள் இந்த காப்பீட்டு திட்டத்தில் சேரலாம். விண்ணப்ப படிவம், அடையாள மற்றும் முகவரி சான்றின் நகல்கள் போன்ற எந்தவிதமான காகித பயன்பாடுமின்றி தபால்காரர் கொண்டு வரும் ஸ்மார்ட் போனில் விரல் ரேகை மூலம் 5 நிமிடங்களில் முற்றிலும் டிஜிட்டல் முறையில் இந்த பாலிசி வழங்கப்படுகிறது.

அஞ்சலகங்கள், தபால்காரர்கள் மூலம்

இந்த திட்டத்தின் மூலம் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், நிரந்தர பகுதி ஊனம் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றிற்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள விபத்து காப்பீடு செய்யப்படுகிறது.

விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள், விபத்தினால் மரணம், ஊனம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் கல்வி செலவுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்படும்.

பல்வேறு பலன்களை வழங்கும் இந்த விபத்து காப்பீட்டு பாலிசியை ஒருவர் எடுப்பதன் மூலம் எதிர்பாராமல் நிகழும் விபத்துகளால் ஏற்படும் உடல் நல நெருக்கடிகளையும், நிதி நெருக்கடிகளையும், உயிரிழப்புகளால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்ய முடியும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் அருகில் உள்ள அஞ்சலகங்கள் மற்றும் தபால்காரர்கள் மூலம் இந்த விபத்து காப்பீட்டு திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்