அருங்காட்சியகத்தை பராமரித்து பழங்கால சிலைகள் பாதுகாக்கப்படுமா?

கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் அருங்காட்சியகத்தை பராமரித்து பழங்கால சிலைகள் பாதுகாக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் கருத்து;

Update: 2023-04-29 18:45 GMT

கடலூர் 

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களுக்கும் ஒரே ஒரு அரசு அருங்காட்சியகம் கடலூரில் செயல்பட்டு வருகிறது. இந்த அருங்காட்சியகம் கடந்த 1989-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் இந்த அரசு அருங்காட்சியகம் கடலூர்-நெல்லிக்குப்பம் சாலையில் போதிய இடவசதியின்றி செயல்பட்டு வந்தது. தற்போது கடலூர் பழைய கலெக்டர் அலுவலகத்தில் இயங்கி வருகிறது.

இங்கு மாவட்டத்தின் வரலாறு தொடர்பான விவரங்கள், தாவரங்கள், விலங்குகள் உள்ளிட்ட பொருட்கள் வைக்கப்பட்டு உள்ளன. மரங்கள், இழைகள், கரடி, அன்னம், பல்லி மற்றும் பாம்புகள், மர புதை படிமங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு உள்ளன. இதில் சிவலிங்கம், நந்தி, விஷ்ணு, குரங்கு சிற்பங்கள், நரசிம்மா, சண்டிகேசுவரர் சிலைகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. தமிழ் எழுத்துகள், டைனோசர் மாதிரி மற்றும் காளி சிலையும் உள்ளது.

1,561 வகையான பொருட்கள்

இது தவிர பழங்கால இசைக்கருவிகள், கல்வராயன்மலைவாழ் பழங்குடியினர் பயன்படுத்திய விவசாய கருவிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலேயேர்கள் ஆட்சிக்காலத்தில் பயன்படுத்தி வெடி மருந்து குப்பிகள், பழங் காலத்து நாணயங்கள், திமிங்கல எழும்புகள், பழங்கால விளக்குகள், விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் கிடைத்த கி.பி. 15-ம் நூற்றாண்டை சேர்ந்த லட்சுமி நாராயணன் சிலை, செஞ்சியில் கிடைத்த கி.பி. 20-ம் நூற்றாண்டை சேர்ந்த விநாயகர் சிலை, கடலூர் பெண்ணையாற்றில் கிடைத்த கி.பி. 18-ம் நூற்றாண்டை சேர்ந்த தேவி சிலை, பழங்கால ஆயுதங்கள் உள்ளிட்ட 1,561 வகையான பொருட்கள் உள்ளன. சிலைகள் மட்டும் 126 உள்ளன.

இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட குழந்தைகளுக்கு ரூ.3, பெரியவர்களுக்கு ரூ.5, வெளிநாட்டை சேர்ந்த குழந்தைகளுக்கு ரூ.50, பெரியவர்களுக்கு ரூ.100 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகள் இலவசமாக பார்வையிடலாம். இந்த அரசு அருங்காட்சியகத்தை தினந்தோறும் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிட அனுமதி உண்டு.

பழங்கால சிலைகள்

இந்நிலையில் இங்குள்ள பழங்கால சிலைகள் போதிய பராமரிப்பின்றி காணப்படுகிறது. சிலைகள் அனைத்தும் அரசு அருங்காட்சியகத்தில் வெளியே வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகள் அனைத்தும் கொளுத்தும் வெயிலிலும், கொட்டும் மழையிலும் கிடந்து வீணாகி வருகிறது. சில சிலைகள் அப்படியே மண்ணோடு மண்ணாக புதைந்தும் கிடக்கிறது. இவற்றை பராமரிக்காமல் அப்படியே போட்டு உள்ளனர். 50-க்கும் மேற்பட்ட சிலைகள் உடைந்த நிலையில் உள்ளன. இதை உடைந்த நிலையில் தான் தங்களிடம் ஒப்படைத்ததாக ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் பழமை வாய்ந்த நினைவு சின்னங்கள், கருவிகள் உள்ளிட்டவற்றை நம் கண்முன்னே காண்பது இது போன்ற அருங்காட்சியகங்கள் வாயிலாக தான் என்பது மறுக்க முடியாத உண்மை. இணையதளத்தில் சென்று அந்த புகைப்படங்கள், வீடியோவை பார்த்தாலும், நேரில் வந்து பார்த்து அறிந்து கொள்ள இது போன்ற அருங்காட்சியகங்கள் தான் கல்வி கற்கும் மாணவர்களுக்கும், ஆராய்ச்சியாளர்களுக்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது.

அதேபோல் இந்த அலுவலகமும் சிறிய, சிறிய அறைகளாக உள்ளது. பெரிய அளவில் பொருட்களை காட்சிப்படுத்த முடியாத நிலை உள்ளது. இதனால் இந்த அருங்காட்சியகத்தை நவீனப்படுத்த முயற்சி நடக்கிறது. இதில் சிறுவர்கள் பூங்கா, சுற்றுலா தலங்களின் புகைப்படங்கள், கோவில்களின் சிற்பங்கள் வரைந்து காட்சி படுத்தவும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக தெரிகிறது. இருப்பினும் இது போன்ற பாரம்பரிய சிலைகளை பாதுகாத்து மீட்டெடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பாதுகாக்க வேண்டும்

கடலூர் முற்போக்கு எழுத்தாளர் சங்கம் பால்கி கூறுகையில், கடலூர் நெல்லிக்குப்பம் சாலையில் அரசு அருங்காட்சியகம் இருந்த போதே, அதை சரியாக பராமரிக்கவில்லை. தற்போது பழைய கலெக்டர் அலுவலகத்திற்கு அருங்காட்சியகம் மாற்றப்பட்டு உள்ளது. அங்கும் பழங்கால சிலைகள் அனைத்தும் வெளியே போதிய பராமரிப்பின்றி கிடக்கிறது. மதுரை, சென்னை போன்ற இடங்களில் சிலைகளை பாதுகாப்பது போல், நமது அருங்காட்சியகத்திலும் பழங்கால சிலைகளை நிழலில் வைத்து பாதுகாக்க வேண்டும். மேலும் விசாலமான இடங்களில் பழங்கால பொருட்களை வைத்து காட்சிப்படுத்த வேண்டும். அப்போது தான் பார்வையாளர்கள் அதிக அளவில் வருவார்கள். பழைய கலெக்டர் அலுவலகத்தையும் பராமரித்து நினைவு சின்னமாக வைக்க வேண்டும் என்றார்.

வருத்தம் அளிக்கிறது

கடலூர் சமூக ஆர்வலர் தேவநாதன்:- அரசு அருங்காட்சியகம் இதுவரை தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்தது. இதனால் எந்தவிதமான வளர்ச்சியும் இல்லை. எங்களை போன்றவர்களின் முயற்சியால் தற்போது அரசு கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதனால் வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்த்த கடலூர் மக்களுக்கும், மாணவர்களுக்கும் ஏமாற்றமே. மேலும் மிகவும் பழமை வாய்ந்த சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் பாதுகாப்பான இடம் இல்லாததால் சென்னையில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. தற்போது பழைய கலெக்டர் அலுவலகம் மிக பறந்து விரிந்து இருப்பதால் கடலூருக்கு சொந்தமான மிகப்பழமை வாய்ந்த மற்றும் அருங்காட்சியத்திற்கு சொந்தமான சிலைகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அருங்காட்சியத்திற்கு வரவழைக்க வேண்டும்.

தற்போது அருங்காட்சியகம் எங்கு உள்ளது என்று மக்களுக்கு தெரியாத நிலை உள்ளது. அருங்காட்சியகத்தை புனரமைக்க வேண்டும். மேலும் அங்கு இருக்கும் சிலைகள் உள்ளிட்ட பொருட்கள் மழையிலும், வெயிலிலும் வீணாகிப்போவதை தடுக்க வேண்டும். 200 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டுக்கு தலைநகராக இருந்த கடலூரில் அருங்காட்சியகம் சிறப்பாக செயல்படாதது வருத்தத்தை அளிக்கிறது. கடலூரில் பல இடங்களில் இருக்கும் அரியவகை பொருட்கள் அனைத்தையும் சேகரித்து கடலூர் அருங்காட்சியகத்தை புனரமைத்து தமிழ்நாட்டில் சிறந்த அருங்காட்சியமாக மாற்றுவதற்கு மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றார்.


Tags:    

மேலும் செய்திகள்