கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம்
ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேரத்திலும் செயல்பட வலியுறுத்தி கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டம் நடந்தது
மயிலாடுதுறை மாவட்டம், கொள்ளிடம் அருகே மாதிரவேளூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு நாள் ஒன்றுக்கு 200-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்த ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக இரவு நேரங்களில் இயங்கவில்லை. இதனால், இரவு நேரங்களில் உடல்நலம் பாதிக்கப்படுபவர்களை இங்கு அழைத்து வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், விரக்தி அடைந்த அப்பகுதி மக்கள் மாதிரவேளூர் ஆரம்ப சுகாதார நிலையம் இரவு நேரத்திலும் செயல்பட வலியுறுத்தி அந்த சுகாதார நிலையம் முன்பு நேற்று மாலை ஒன்று திரண்டு கற்பூரம் ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரம் கோஷமிட்ட அவர்கள் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.