மக்கள் தொடர்பு முகாம்

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் தெற்கனேந்தல் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.

Update: 2023-05-11 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

ஆர்.எஸ்.மங்கலம் யூனியன் புல்லமடை ஊராட்சி, தெற்கனேந்தல் கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமை தாங்கி, பயனாளிகளுக்கு ரூ.26.14 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்து துறைகளின் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள். மக்களை தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக கலெக்டர் அனைத்து துறையின் சார்பாக அரசின் திட்டங்கள் குறித்த சாதனை விளக்க கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். பின்னர் தமிழக அரசின் "ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி" குறித்த சாதனை மலர் கையேட்டினை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வெளியிட்டார்.இதில், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராயண சர்மா, வருவாய் கோட்டாட்சியர் கோபு, தனித்துணை ஆட்சியர் மாரிசெல்வி, ஆர்.எஸ்.மங்கலம் வட்டாட்சியர் சிரோன்மணி, துணை வட்டாட்சியர் ரவிக்குமார், புல்லமடை ஊராட்சி தலைவர் கனிமொழி இளையராஜா மற்றும் அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்