நாமக்கல் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்-99 மனுக்களுக்கு உடனடி தீர்வு
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புதன்கிழமை தோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது. இதற்கு போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்தார். மேலும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜூ, கனகேஸ்வரி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு மனுக்களை விசாரணை நடத்தினர். அதில் 99 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டது. இந்த முகாமில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.