தர்மபுரி:
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 9 கோடி பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்று மத்திய அரசை சர்வதேச நிதி அமைப்பு அறிவுறுத்தி இருக்கிறது. பெருகி வரும் மக்கள் தொகையை கணக்கில் கொண்டு இந்த யோசனையை அந்த அமைப்பு தெரிவித்து இருக்கிறது.
அதன் அடிப்படையில் மத்திய அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.
பிரதமர் மோடி அதிரடி
'மத்திய அரசு பணிகளில் 18 மாதங்களில் 10 லட்சம் பேர் நியமனம் செய்யப்படுவார்கள்' என்று அப்போது பிரதமர் மோடி அதிரடியாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி ரெயில்வே துறையில் 2 லட்சத்து 93 ஆயிரம், பாதுகாப்புத்துறையில் 2 லட்சத்து 63 ஆயிரம், உள்துறையில் 1 லட்சத்து 43 ஆயிரம், தபால்துறையில் 90 ஆயிரம், வருவாய்த்துறையில் 80 ஆயிரம், கணக்கு தணிக்கைத் துறையில் 26 ஆயிரம், சுரங்கத்துறையில் 7 ஆயிரம், அணுசக்தி துறையில் 9 ஆயிரத்து 400, நீர்வளத்துறையில் 3 ஆயிரத்து 800 என மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 9 லட்சத்து 79 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி., ரெயில்வே தேர்வு வாரியம் போன்றவைகள் ஈடுபட்டு வருகின்றன.
கடந்த மாதம் 75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார். அதன் தொடர்ச்சியாக கடந்த 22-ந் தேதி அன்று 71 ஆயிரம் பேருக்கு பணி நியமன வழங்கும் முகாமையும் அவர் தொடங்கிவைத்தார்.
மு.க.ஸ்டாலினின் பெருமிதம்
தமிழ்நாட்டை பொறுத்த அளவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசும் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பில் அதிக அக்கறை காட்டி வருகிறது. பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வுகள் நடத்தி நிரப்பப்பட்டு வருகின்றன.
தமிழக போலீஸ் துறையில் 3 ஆயிரத்து 552 போலீஸ் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையம் ஈடுபட்டுள்ளது. படித்த இளைஞர்களுக்கு தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பை உருவாக்கித்தரும் பணியை தமிழக அரசின் தொழிலாளர் நலன் மற்றும் மேம்பாட்டுத்துறை மேற்கொண்டு வருகிறது.
அதன்படி கடந்த ஆண்டு மட்டும் 419 முகாம்கள் நடத்தப்பட்டு 68 ஆயிரத்து 14 பேர் வேலை வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறார்கள்.
சென்னை ராயப்பேட்டை புதுக்கல்லூரியில் கடந்த மாதம் நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, 'தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 1 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது' என்று பெருமிதத்துடன் கூறினார். தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் விரைவில் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த வேண்டும் என்று தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரை கேட்டுக்கொண்டார்.
இதுபோன்ற மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகள் மூலம் வேலை இல்லாத் திண்டாட்டம் குறைந்து இருக்கிறதா? வேலை வாய்ப்பு முகாம்கள் பலன் தருகிறதா? என்பவை பற்றி பட்டதாரிகளும், வேலைதேடும் இளைஞர்களும் வெளிப்படுத்திய கருத்துகளைப் பார்ப்போம்.
மத்திய அரசு பணியில் புதிதாக சேர்ந்துள்ள சிவகவி சுதிர்:-
ஆந்திராவை சேர்ந்த நான் கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசின் பட்டதாரி நிலைப்பணிக்கான (சி.ஜி.எல்.) தேர்வு எழுதினேன். இந்த முடிவுக்காக காத்திருந்தேன். சமீபத்தில் நடந்த மத்திய அரசின் 10 லட்சம் பேருக்கான நியமன முகாமில் எனக்கு பணி ஆணை கிடைத்தது.
சென்னை துறைமுக கண்காணிப்பு பிரிவில் பணி (பிரிவெண்ட் ஆபிசர்) ஒதுக்கி இருக்கிறார்கள். தற்போது எனது கனவு சாத்தியமாகி இருக்கிறது. இதற்காக மத்திய அரசுக்கு எனது நன்றிகள். இதுபோல தொடர் நியமனங்கள் சாத்தியமாகும் பட்சத்தில் படித்து முடித்த மாணவர்கள் நல்ல நிலையை எட்டலாம். எனக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனே நேரடியாக பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டி பேசினார். அது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் ஆகும்.
கேள்விக்குறி
ஆண்டிபட்டியை சேர்ந்த எம்.பில். பட்டதாரி மணிகண்டன்:-
மத்திய, மாநில அரசுகள் தேர்தல் அறிக்கையின்போது படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதாக அறிவிப்புகளை வெளியிடுகின்றன. ஆனால் தேர்தல் அறிக்கையில் அறிவித்தவாறு வேலை வாய்ப்புகளை வழங்குகின்றனவா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையை ஒப்பிடும்போது அரசு வேலைகளுக்கு சென்றவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. எனவே படித்த இளைஞர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மத்திய, மாநில அரசுகள் அறிவித்தபடி வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மிகக் குறைவாக உள்ளது
வத்தலாபுரத்தை சேர்ந்த பட்டதாரிகணபதி மணி:-
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பல்வேறு படிப்புகளை படித்த இளைஞர்களை பதிவு செய்வதன் மூலம் கிடைக்கும் அரசு வேலை வாய்ப்புகள் மிக குறைவாகவே உள்ளன. தகுதி உள்ளவர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குவதில் அதிக அதிகாரம் கொண்டவையாக வேலை வாய்ப்பு அலுவலகங்கள் மாற்றப்பட வேண்டும். உண்மையான தகுதியின் அடிப்படையில் அரசு வேலைகள் இளைஞர்களுக்கு கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மத்திய அரசு துறைகளில் நீண்ட காலமாக நிரப்பப்படாமல் காலியாக உள்ள பணியிடங்களை தான் மத்திய அரசு தற்போது நிரப்பி வருகிறது. இது அரசின் கடமை.
வெளிப்படைத்தன்மை
ராமகொண்ட அள்ளியை சேர்ந்த பட்டதாரி ரேவதி:-
பல்வேறு துறைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு தருவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்கின்றன. ஆனால் பல்வேறு உயர் படிப்புகளை படித்து முடித்து வேலைவாய்ப்பு கிடைக்காதவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதற்கு தீர்வு காண அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை தகுதி கொண்ட இளைஞர்கள் மூலம் நிரப்ப விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து உள்ளவர்களுக்கு அரசு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்குவதில் வெளிப்படை தன்மையை உருவாக்க வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலை பெற்றவர்கள் குறித்த விவரங்களை அனைவரும் தெரிந்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டும்.
நம்பிக்கை ஏற்படுகிறது
பாலக்கோட்டை சேர்ந்த என்ஜினீயரிங்பட்டதாரி பாலாஜி:-
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் அகில இந்திய குடிமை பணி தேர்வு, தமிழக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வு ஆகியவற்றை எழுதுவதற்கு இலவசமாக பயிற்சி அளிக்கப்படுவது பயன் உள்ளதாக இருக்கிறது. படித்து முடித்துவிட்டு வேலை தேடி அலையும் இளைஞர்களுக்கு தமிழக அரசே வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி வேலைவாய்ப்புகளை உருவாக்கி தருவது பாராட்டுக்குரியது.
இதன் மூலம் படித்தால் வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நம்பிக்கை மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. என்ஜினீயரிங் படிப்பை முடித்த பட்டதாரிகள் அதிக அளவில் உள்ளனர். அவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கி தர வேண்டும்.
பிரதிநிதித்துவம்
மாக்கன்கொட்டாயை சேர்ந்த பட்டதாரி நடராஜ்:- காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக மத்திய, மாநில அரசுகள் எடுத்து வரும் நடவடிக்கைகள் அரசு பணியை விரும்புகிறவர்களுக்கு நம்பிக்கை ஒளியை ஏற்படுத்துகிறது. அந்தந்த மாநிலங்களில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை அந்தந்த மாநிலங்களை சேர்ந்தவர்களை கொண்டு நிரப்ப வேண்டும். தமிழகத்தில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் வடமாநிலங்களை சேர்ந்தவர்களே பெரும்பாலும் பணிபுரிகிறார்கள். மத்திய அரசு பணிகளில் தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு உரிய பிரதிநிதித்துவத்தை வழங்க வேண்டும்.
ஐ.டி. துறையிலும்...
மத்திய, மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு அரசாங்கங்கள் முனைப்பு காட்டி வருவது படித்த இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டால் அரசு துறைகளில் சுணக்கம் குறைந்து பணிகள் வேகம் எடுக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மனதில் பிறந்துள்ளது.
கொரோனாவால் ஆட்டம் கண்ட தனியார் துறையும் தற்போது ஆட்கள் தேர்வில் கவனம் செலுத்தி வருகிறது. ஐ.டி. துறையில் 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று 'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ்ணன் சமீபத்தில் அறிவித்திருப்பது என்ஜினீயரிங் இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு உத்வேகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.