பர்கூர் அரசு பெண்கள் பள்ளியில்தேசிய குடற்புழு நீக்க முகாம் கலெக்டர் சரயு தொடங்கி வைத்தார்

Update: 2023-08-18 19:45 GMT

பர்கூர்

பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாமை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து மாத்திரைகளை வழங்கினார்.

குடற்புழு நீக்க முகாம்

பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க முகாமை கலெக்டர் சரயு தொடங்கி வைத்து, மாணவிகளுக்கு அல்பெண்டாசோல் மாத்திரைகளை வழங்கினார். முன்னதாக மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

தொடர்ந்து கலெக்டர் பேசியதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது. மேலும், விடுப்பட்ட குழந்தைகளுக்கான குடற்புழு நீக்க முகாம் வருகிற 24-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த முகாமில் 1 முதல் 19 வயது வரையிலான சிறுவர்கள், கருவுறாத மற்றும் பாலூட்டாத 20 முதல் 30 வயதுக்குட்பட்ட பெண்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்படும்.

இதில் 1 முதல் 2 வயது குழந்தைகளுக்கு 200 மில்லி கிராம் அல்பெண்டாசோல் மாத்திரையும் 2 முதல் 19 வயது சிறுவர்கள் மற்றும் 20-30 வயதுடைய பெண்களுக்கு 400 மி.கி அல்பெண்டாசோல் மாத்திரையும் வழங்கப்படும். மாத்திரைகளை காலை அல்லது மதிய உணவிற்கு பிறகு நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

குறைபாடுகள் நீங்கும்

இந்த மாத்திரை சாப்பிடுவதால் குடற்புழு முற்றிலும் நீக்கப்படும். ரத்தசோகை நோய் மற்றும் ஊட்டசத்து குறைபாடு நீங்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு உடல் வளர்ச்சி அதிகரிப்பு, குழந்தையின் எடை அதிகரிப்பு, பிற நோய் தொற்றுகளுக்கு எதிர்ப்பு, மேம்படுத்தப்பட்ட அறிவாற்றல், சுறுசுறுப்பாக இருத்தல் ஆகியவை மேம்பாடு அடையும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 1-19 வயது வரை உள்ள 5,52,417 குழந்தைகள், 20-30 வயது வரை உள்ள 1,64,549 பெண்கள் என மொத்தம் 7,16,966 நபர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 1796 அங்கன்வாடி மையங்கள், 270 துணை சுகாதார நிலையங்கள், 61 ஆரம்ப சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கும் முகாம் நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் சுகாதார பணிகள்துணை இயக்குனர் டாக்டர் ரமேஷ்குமார், வட்டார மருத்துவ அலுவலர் சிவக்குமார், மருத்துவர்கள் திருலோகசுந்தர், கார்த்திகேயன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சங்கர், தாய்சேய் நல அலுவலர் கலைவாணன், பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில்குமார், பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரிய பெருமக்கள், மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்