துணிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் கேமரா: மேலாளர் உள்பட 3 பேர் கைது

துணிக்கடையில் பெண்கள் உடைமாற்றும் அறையில் செல்போன் கேமரா இருந்த விவகாரத்தில் கடை மேலாளர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2023-06-28 20:51 GMT

கள்ளக்குறிச்சி,

நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் இயங்கும் பிரபல ஜவுளிக்கடையின் கிளை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் மேல வீதியில் செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு கடந்த 25-ந் தேதி ஜவுளி எடு்க்க வந்த பெண் ஒருவர், அங்குள்ள உடைமாற்றும் அறைக்கு சென்றார். அப்போது அறையின் மேல்பகுதி ஏ.சி.வெண்டிலேட்டரில் கேமரா உள்ள செல்போன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்ததுடன், அவர், இதுபற்றி கடை மேலாளர் விழுப்புரம் மாவட்டம் வெள்ளையம்பட்டு கிராமத்தை சேர்ந்த ராசாகண்ணு மகன் ஏழுமலை (வயது 31) என்பவரிடம் புகார் கூறியதுடன், திருக்கோவிலூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார்.

இதைப்பார்த்த கடையில் பணிபுரியும் பெண் ஊழியர் உதயா (22) மற்றும் ஜவுளி எடுக்க வந்த மற்றொரு பெண்ணும் புகார் தெரிவித்த பெண்ணிடம் இருந்த செல்போனை பறித்தனர். மேலும் உதயா செல்போன் மெமரி கார்டை அப்புறப்படுத்தி, மறைத்ததாக கூறப்படுகிறது.

துப்புரவு பணியாளர் சிக்கினார்

இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் போலீசார் கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மேலும் போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர். அப்போது கடையில் வேலைபார்க்கும் பெண் ஊழியர் உதயாவின் சகோதரரான, அதே கடையில் துப்புரவு பணியாளராக வேலை பார்க்கும் விக்னேஷ் (25) என்பவர் உடை மாற்றும் அறைக்குள் சென்று வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் விக்னேசை பிடித்து விசாரணை நடத்தியபோது, கீழே கண்டெடுத்த செல்போனை சபல புத்தியால் உடைமாற்றும் அறையில் வைத்ததை ஒப்புக்கொண்டார். உதயாவிடம் நடத்திய விசாரணையில், செல்போன் தனது சகோதரன் வைத்திருந்தது என தெரியவந்ததால், அதனை பறித்ததுடன், மெமரிகார்டை எடுத்து, அவரை காப்பாற்ற முயன்றேன் என கூறினார்.

3 பேர் கைது

இதையடுத்து உடைமாற்றும் அறையில் செல்போனை ரகசியமாக மறைத்து வைத்த விக்னேஷ், தடயத்தை மறைத்து அவரை காப்பாற்ற முயன்ற அவருடைய சகோதரி உதயா மற்றும் கடையின் மேலாளர் ஏழுமலை ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் குறித்து போலீசார் கூறுகையில், உடை மாற்றும் அறையில் வைக்கப்பட்டது மெமரிகார்டு வசதியுள்ள சாதாரண கேமரா வசதி உள்ள செல்போன் ஆகும். அந்த செல்போனில் எந்த காட்சியும் பதிவாகவில்லை என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்