மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்தகன்டெய்னரில் கடத்திய ரூ.1½ கோடி கசகசா பறிமுதல்

மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கன்டெய்னரில் கடத்திய ரூ.1½ கோடி கசகசா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2023-10-12 18:45 GMT

மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த கன்டெய்னரில் கடத்திய ரூ.1½ கோடி கசகசாவை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கால்நடை தீவனம்

தூத்துக்குடி துறைமுகம் வழியாக பல்வேறு நாடுகளில் இருந்து பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன. இதில் ஏதேனும் பொருட்கள் கடத்தப்பட்டு வருகிறதா? என்று மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் மலேசியாவில் இருந்து தூத்துக்குடிக்கு வந்த ஒரு கன்டெய்னரில் கால்நடை தீவனம் (பார்லி தவிடு) இறக்குமதி செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த கன்டெய்னர் தூத்துக்குடியில் உள்ள ஒரு தனியார் குடோனில் சுங்கத்துறை ஆய்வுக்காக வைக்கப்பட்டு இருந்தது.

ரூ.1½ கோடி கசகசா பறிமுதல்

அப்போது அந்த கன்டெய்னரில் இருந்து கசகசா வெளியில் சிதறி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த கன்டெய்னரை பாதுகாப்பாக வைத்து இருந்தனர். இந்தநிலையில் மத்திய வருவாய்புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அந்த கன்டெய்னரை திறந்து சோதனை நடத்தினர்.

அப்போது கன்டெய்னரின் முன்பகுதியில் தவிடு மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தன. அதற்கு பின்பகுதியில் சுமார் 9 டன் கசகசா மூட்டைகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்தன. இதன் மதிப்பு ரூ.1½ கோடி என்று கூறப்படுகிறது.

மேலும் கசகசாவை இறக்குமதி செய்ய தடை இல்லை. ஆனால் அதற்கு கூடுதல் வரி செலுத்த வேண்டும். ஆகையால் வரி ஏய்ப்பு செய்யும் நோக்கத்தில் தவிடு என்ற பெயரில் கசகசாவை பதுக்கி கடத்தி வந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. தொடர்ந்து இறக்குமதி செய்தவர்கள் குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்