தூத்துக்குடியில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்தார்
தூத்துக்குடியில் பாதுகாப்புக்கு வந்த போலீஸ் ஏட்டு மயங்கி விழுந்தார். அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று நடந்தது. இந்த விழா பாதுகாப்புக்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் வரவழைக்கப்பட்டு உள்ளனர். அதன்படி தேனி மாவட்டத்தில் இருந்தும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில் தேனி மாவட்டம் அல்லிநகரத்தை சேர்ந்த போலீஸ் ஏட்டு காமராஜ் என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்த போது திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக 108 ஆம்புலன்சு வரவழைக்கப்பட்டு, சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு காமராஜை நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்து, ஆறுதல் கூறினார்.