கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம்: கட்டிட தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் வேலை இழப்பு
கல்குவாரி வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கட்டிட தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.;
கல்குவாரி வேலைநிறுத்தம் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கட்டிட தொழிலாளர்கள் 10 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
வேலைநிறுத்தம்
தமிழகம் முழுவதும் கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர்கள் கடந்த 26-ந் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது.
கல் குவாரிகள் மீது தனிநபர்கள் கொடுக்கும் புகாரின் பேரில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக்கூடாது. சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படும் மோசடி நபர்களை கண்டறிந்து அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். சிறு கனிமங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி தேவையில்லை என்பதை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கல்குவாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கி உள்ளனர். இதனால் கட்டிட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
சிக்கல்
இதுகுறித்து ஈரோடு ரியல் எஸ்டேட் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் சதாசிவம் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய கல்குவாரிகள் இயங்கி வருகிறது. தற்போது கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக ஜல்லி கற்கள், எம்.சாண்ட், குவாரி துகள்கள் மற்றும் ரெடிமிக்ஸ் கான்கிரீட் லாரிகள் ஓடாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதன் காரணமாக கட்டுமான பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு, தொழிற்சாலை கட்டிடம், வீடுகள் கட்டும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. மேலும் அரசு திட்டங்கள் செயல்படுத்துவதிலும் தாமதம் ஏற்பட்டு இருக்கிறது.
10 ஆயிரம் பேர் பாதிப்பு
குறிப்பாக, கீழ்பவானி வாய்க்காலில் தற்போது புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் முடிந்து ஆடி மாதம் 18-ந்தேதி தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் காரணமாக பணிகள் நடைபெறாமல் உள்ளதால் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதேபோல் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைஇல்லாமல் கடும் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். எனவே தமிழக அரசு, குவாரி உரிமையாளர்கள் சங்கத்தினரை அழைத்து பேசி இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.