கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டம்
கல்குவாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்
அதிகாரிகள் அச்சுறுத்தல்
தமிழ்நாடு கல்குவாரி கிரசர், எம்.சாண்ட் உரிமையாளர் சங்க மாநில நிர்வாகிகள் அவசர கூட்டம் நேற்று திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சின்னசாமி தலைமை தாங்கி பேசினார். அவர் பேசுகையில், அதிகாரிகள் அச்சுறுத்தல், போலி சமூக ஆர்வலர்கள் அச்சுறுத்தலால் கல்குவாரி தொழில் தொடர்ந்து நடத்த முடியாமல் கடுமையான சூழல் இருந்து வருகிறது. இதனால் இந்த கல்குவாரி தொழிலை நம்பி உள்ள குடும்பங்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றன. சட்டத்திற்கு உட்பட்டு முறையான அனுமதி பெற்றுக்கொண்டு கல்குவாரிகள் நடத்தி வருகிறோம். சட்டவிரோதமாக கல்குவாரிகள் இயங்கவில்லை.
வேலை நிறுத்தம்
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று (திங்கட்கிழமை) முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கி உள்ளோம். இதன்படி தமிழகத்தில் உள்ள 2 ஆயிரம் கல்குவாரிகள், 5 ஆயிரம் கிரசர் மற்றும் டிப்பர் லாரிகள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். மேலும் பொருட்களை 15 வருடங்களுக்கு முன்பு எந்த விலையில் விற்பனை செய்து வந்தோமோ, அதே விலையில் தான் தற்போது விற்பனை செய்து வருகிறோம், என்றார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.