போலீஸ் எனக்கூறி அழைத்து சென்று வாலிபரை கொன்றது அம்பலம்

பாணாவரம் அருகே வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் எனக்கூறி அழைத்து சென்று கொன்றது தெரியவந்துள்ளது.

Update: 2022-07-11 18:30 GMT

பாணாவரம் அருகே வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட வழக்கில், போலீஸ் எனக்கூறி அழைத்து சென்று கொன்றது தெரியவந்துள்ளது.

வாலிபர் வெட்டிக்கொலை

ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் அடுத்த கூத்தம்பாக்கத்தை சேர்ந்தவர் அசோக்குமார். இவரது மகன் சரத்குமார் (வயது 22). இவர் மீது பாணாவரம் போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி, செயின் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளில் கைதாகி சிறை சென்ற அவர் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வந்தார். தினமும் பாணாவரம் போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார்.

கடந்த 9-ந்் தேதி இரவு அவருடைய வீட்டுக்கு 3 பேர் வந்துள்ளனர். அவர்கள் தாங்கள் திருவள்ளூர் போலீசார் எனவும், வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் கூறி சரத்குமாரை அழைத்து சென்றுள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை பாணாவரம் அடுத்த புதூர் மலைமேடு பகுதியில் உள்ள சுடுகாட்டின் அருகே கை கால்களை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

முன்விரோதம்

இது தொடர்பாக ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன், ராணிப்பேட்டை துணைபோலீஸ் சூப்பிரண்டு பிரபு மற்றும் பாணாவரம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் நித்யா என்ற ரவுடிக்கும், பாணாவரம் இலங்கை தமிழர் முகாமை சேர்ந்த வினோத் குமார் என்பவருக்கும் முன் விரோதம் இருந்துள்ளது. இதனால் முகாமில் வசிக்கும் கிளிண்டன் மூலம் நித்யாவை கடந்த ஆண்டு வரவழைத்த வினோத்குமார் அவரை கொலை செய்துள்ளார். இதில் கிளிண்டன் வினோத்குமாருக்கு எதிராக கோர்ட்டில் சாட்சி சொல்லப் போவதாக கூறியுள்ளார். இதனால் கடந்த மாதம் 18-ந் தேதி கிளிண்டனை வினோத்குமார் தரப்பினர் கொலை செய்ய முயன்றுள்ளனர்.

அப்போது கிளிண்டனின் நண்பரான சரத்குமார் அங்கு வந்தார். இதனால் வினோத்குமார் தரப்பினர் தப்பி ஓடி விட்டனர். இச்சம்பவம் சரத்குமாருக்கு தெரிந்து விட்டதால் அவரையும் தீர்த்து கட்ட வினோத்குமார் தரப்பினர் திட்டமிட்டு உள்ளனர். அதன்படி கடந்த மாதம் 20-ந் தேதி வீரராகவபுரத்தில் சரத்குமாரை, வினோத்குமார், வண்டு என்கிற ராஜேஷ், கீழ்வீராணம் ராமச்சந்திரன், தாளிக்கால் முருகேசன், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் குடியிருப்பை சேர்ந்த பில்லா என்கிற சூர்யா ஆகிய 5 பேர் கொண்ட கும்பல் சரத்குமாரை கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர்.

தனிப்படை

இதில் படுகாயம் அடைந்த சரத்குமார் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். அதேபோல் கிளிண்டனும் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். சரத்குமாரை வெட்டிய வழக்கில் வினோத்குமார், வண்டு என்கிற ராஜேஷ் ஆகிய இரண்டு பேரும் வாலாஜா கோர்ட்டில் சரணடைந்தனர். அவர்களை வேலூர் சிறையில் அடைத்தனர். மேலும் முருகேசன் என்பவரை பாணாவரம் போலீசார் கைது செய்தனர்.

தலைமறைவான பில்லா என்கிற சூர்யா, கீழ்வேராணம் ராமச்சந்திரன் ஆகிய இரண்டு பேரையும் தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் சரத்குமார் கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் பார்த்தசாரதி, முனிசேகர் ஆகியோர் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டு, தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சரத்குமாரை போலீஸ் என கூறி அழைத்துச் சென்ற மூன்று பேர் யார்?, ஏற்கனவே சரத்குமாரை 20-ந் தேதி வெட்டி கொல்ல முயன்ற வழக்கில் தலைமறைவாக உள்ள இரண்டு பேருக்கும் இதில் தொடர்பு உள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சரத்குமார் வெட்டி கொலை செய்யப்பட்ட பாணாவரம் பகுதியில் அசம்பாவிதங்களை தடுக்க காமராஜர் தெரு, இலங்கை தமிழர் குடியிருப்பு, காவேரிப்பாக்கம்- சோளிங்கர் சாலை, பாணாவரம் நெமிலி சாலை, ெரயில் நிலைய பகுதி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்