200 கிலோ கேக் வெட்டி எடப்பாடி பழனிசாமி கொண்டாட்டம்

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை 200 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.

Update: 2023-05-12 20:12 GMT

சேலத்தில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது பிறந்த நாளை 200 கிலோ கேக் வெட்டி கொண்டாடினார்.

69-வது பிறந்தநாள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்று சேலம் சூரமங்கலம் நெடுஞ்சாலை நகரில் உள்ள தனது வீட்டில் கட்சியினர் முன்னிலையில் 69-வது பிறந்த நாளை கொண்டாடினார்.

இதையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் வெங்கடாஜலம், புறநகர் மாவட்ட செயலாளர் இளங்கோவன் ஆகியோர் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

200 கிலோ கேக்

இதைத்தொடர்ந்து வீட்டு வாசலில் 20 அடி நீளத்திற்கு 200 கிலோ கேக் வைக்கப்பட்டது. அதை எடப்பாடி பழனிசாமி கட்சியினர் முன்னிலையில் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார். பின்னர் அவர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களுக்கு கேக் மற்றும் இனிப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரண்டு வந்து எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து, மாலை மற்றும் சால்வை கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் கொண்டாடப்படும் முதல் பிறந்த நாள் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அ.தி.மு.க. முக்கிய நிர்வாகிகள் திரளாக வந்தனர். பின்னர் அவர்கள் வரிசையாக நின்று எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

முன்னாள் அமைச்சர்கள்

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவையை சேர்ந்த கட்சியினருடன் வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆப்பிள் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, கே.பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், உதயகுமார், கே.வி.ராமலிங்கம் மற்றும் தம்பிதுரை எம்.பி. உள்பட பலரும் எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு வந்து அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளும் கலந்து கொண்டு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்