தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலசங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்
கேபிள் டி.வி. கட்டண சேனல்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலசங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கேபிள் டி.வி. கட்டண சேனல்களின் கட்டண உயர்வை கட்டுப்படுத்தக்கோரி திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலசங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கட்டண உயர்வு
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் தமிழக கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத்தின் மாநில தலைவர் வீரமுத்து தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் பிரகாஷ், பொருளாளர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் வீரமுத்து பேசிய போது கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் உள்ளோம். சுமார் ஒரு கோடி வாடிக்கையாளர்கள் உள்ளனர். இந்த நிலையில் கட்டண சேனல்கள் கட்டணத்தை உயர்த்தி கொள்ள மத்திய அரசின் கீழ் செயல்படும் தொலை தொடர்பு ஒழுங்கு முறை ஆணையம்(டிராய்) பரிந்துரைத்துள்ளது. இதை வாய்ப்பாக பயன்படுத்தி கார்பரேட் முதலாளிகள் சேனல்களின் கட்டணத்தை மிகவும் அதிகமாக உயர்த்தி பொதுமக்களின் தலையில் தாங்கமுடியாத சுமையை ஏற்றியுள்ளனர்.
மறுபரிசீலனை வேண்டும்
அவர்களிடம் வசூலிக்கும் கேபிள் கட்டணத்தை கார்பரேட் முதலாளிகளுக்கு செலுத்துவதற்கே போதுமானதாக இல்லை. கட்டண சேனல்கள் விளம்பரத்தில் அதிக லாபம் ஈட்டி வரும் நிலையிலும் பார்வையாளர்களிடம் கட்டணத்தை உயர்த்துவது அநியாயமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் திருப்பூர் தெற்கு தாலுகா செயலாளர் கஜேந்திரன், தலைவர் ராஜன், வடக்கு தாலுகா செயலாளர் பிரகாஷ், தலைவர் சிவபிரகாஷ், காங்கயம் செயலாளர் சண்முகம், ஊத்துக்குளி செயலாளர் அண்ணாதுரை, பல்லடம் தலைவர் உத்தமன் உள்பட நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் கட்டண கொள்கையை மறுபரிசீலனை செய்ய கலெக்டர் பரிந்துரைக்க வேண்டும் என கலெக்டர் அலுவலகத்தில் சங்கத்தின் சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.