மாமல்லபுரத்தில் சி20 சர்வதேச மாநாடு நிறைவு - கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்பு

மாமல்லபுரத்தில் சி20 சர்வதேச மாநாடு நிறைவு பெற்றது. இதில் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்றார்.

Update: 2023-05-31 09:33 GMT

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி நட்சத்திர விடுதியில் சர்வதேச சி20 மாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.

இந்த மாநாட்டின் இறுதி நாள் நிகழ்ச்சியில் தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

வசுதெய்வ குடும்பகம் நமது இந்தியாவின் ஆன்மிக அடையாளம் ஆகும். தற்போது இந்தியா ஜி 20 நாடுகளின் தலைமை பொறுப்பை வகிக்கிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இது நாம் பெருமை பட வேண்டிய விஷயமாகும்.

கொரோனா நமக்கு பெரிய பாடத்தை கற்று தந்தது. யாதும் ஊரே, யாவரும் கேளிர் என்பது இந்தியாவில் இருந்து மட்டுமல்ல உலகெங்கிலும் உச்சரிக்கும் ஒரே வார்த்தை வசுதெய்வ குடும்பகத்தால் நமக்கு பெருமை.

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட போது இந்தியா சொந்தமாக தடுப்பூசியை தயாரித்தது. இந்த தடுப்பூசியால் கொரோனாவை இந்தியாவில் மேலும் அதிக அளவில் பரவவிடாமல் கட்டுக்குள் கொண்டு வர முடிந்தது. இந்தியா மற்ற நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்தது. அதுவும் 150 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி முடிவு செய்து வெற்றிகரமாக வழங்கி உலக நாடுகளுக்கு அவர் ஒரு முன்னுதாரணமாக திகழ்ந்தார்.

வருகிற ஜூன் 21 யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்தியா மட்டுமல்லாமல் மற்ற நாடுகளும், குறிப்பாக முஸ்லிம் நாடுகளும் நமது கலாசாரத்தை பின்பற்றி யோகாசனம் செய்து அந்த தினத்தை கொண்டாடுகிறது. யோகா செய்வதால் மனநலம் மற்றும் உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது. இந்த முயற்சியை அனைவரும் ஒன்றே என்ற கோணத்தில் வசுதெய்வ குடும்பகம் பரப்பி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நிறைவு நாள் நிகழ்ச்சியில் செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத், சின்மயா மிஷன் தேசிய ஒருங்கிணைப்பாளர் சுவாமி மித்ரானந்தா, மாமல்லபுரம் ஜி.ரங்கசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்