சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும்; அமைச்சரிடம் ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை

சங்கரன்கோவிலில் புறவழிச்சாலை பணியை விரைவில் தொடங்க வேண்டும் என அமைச்சர் எ.வ.வேலுவிடம், ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை மனு கொடுத்தார்.

Update: 2022-12-23 18:45 GMT

சங்கரன்கோவில்:

மதுரையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலுவை, தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. சந்தித்து மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

கோவில்பட்டி முதல் பருவக்குடி வரையிலான சாலையில் நடுவப்பட்டி பகுதி வரை மட்டுமே சாலை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. எனவே நடுவப்பட்டியில் இருந்து பருவக்குடி வரை சாலை விரிவாக்க பணிகளை மேற்கொள்ள வேண்டும். குருவிகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி வழியாக கழுகுமலை செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். திருவேங்கடம் முதல் ஆலங்குளம் வரை குருவிகுளம் வழியாக செல்லும் சாலையை விரிவுபடுத்த வேண்டும். சங்கரன்கோவில்- நெல்லை சாலையில் இருந்து அடைக்கலாபுரம் கிராமத்திற்கு செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும். தேவர்குளத்தில் இருந்து சுண்டங்குறிச்சி வரும் வரை புதிதாக இணைப்பு சாலை அமைக்க வேண்டும். தேவர்குளத்தில் இருந்து ஊத்துமலை செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும். இடைகால், சேர்ந்தமரம் சாலையில் இருந்து கடம்பன்குளம் செல்லும் சாலையை மேம்படுத்த வேண்டும். நடுவப்பட்டியில் இருந்து குளக்கட்டாகுறிச்சி வரையிலான சாலையை சீரமைக்க வேண்டும்.

நாலுவாசன்கோட்டை, மகேந்திரவாடி சாலையிலிருந்து பஞ்சாயத்து யூனியன் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். குருவிகுளத்தில் இருந்து திருவேங்கடம் செல்லும் சாலையை விரிவுப்படுத்த வேண்டும். வியாபார ரீதியாகவும், கல்வி மற்றும் மருத்துவ தேவைகளுக்காக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் சங்கரன்கோவில் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக புளியம்பட்டியில் இருந்து களப்பாகுளம், நெடுங்குளம் வாயிலாக தெற்கு சங்கரன்கோவில் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதிகளில் முடிவடையும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள சங்கரன்கோவில் புறவழிச்சாலை பணிகளை விரைவாக தொடக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்