மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் புறவழிச்சாலை

மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.;

Update: 2023-01-21 19:40 GMT

அருப்புக்கோட்டை, 

மாவட்டத்தில் அனைத்து நகராட்சிகளிலும் புறவழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.

பூமி பூஜை

அருப்புக்கோட்டை நகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகரின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதியில் இருந்து புறவழிச்சாலை பகுதியை இணைப்பதற்காக ரூ.133 கோடி மதிப்பில் புறவழிச்சாலை அமைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் நேற்று அருப்புக்கோட்டை-விருதுநகர் சாலையில் துணை மின் நிலையம் அருகே இந்த புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை தாங்கினார். அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு புதிய சாலை பணிகளுக்காக பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

புறவழிச்சாலை

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

அருப்புக்கோட்டை நகர் பகுதியில் பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மதுரை மற்றும் தூத்துக்குடி செல்லும் கனரக வாகனங்கள் அருப்புக்கோட்டை நகருக்குள் வருவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கவனத்திற்கு கொண்டு சென்று புறவழிச்சாலை அமைக்க தேவையான நிதியை வாங்கி உள்ளோம்.

முதல் -அமைச்சரும் இந்த திட்டத்திற்கு ரூ.133 கோடியே 58 லட்சத்தை ஒதுக்கி உள்ளார். இந்த புறவழிச்சாலை பணிகள் அனைத்தும் ஒரு ஆண்டுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதேபோல் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சிகளிலும் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் என முதல்-அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

நகராட்சிகள்

நிச்சயமாக நெரிசல் அதிகம் உள்ள 2 நகராட்சிகளிலாவது இந்த ஆண்டு பைபாஸ் சாலைகளை கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை மதுரை வட்ட கண்காணிப்பு பொறியாளர் ஜவகர் முத்து, நெல்லை கோட்ட பொறியாளர் லிங்குசாமி, கோவில்பட்டி உதவி கோட்ட பொறியாளர் ஜவகர் செல்வன், ஆர்.டி.ஓ. கல்யாண்குமார், நகராட்சி ஆணையர் அசோக்குமார், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுப்பாராஜ், இளைஞர் அணி பொறுப்பாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ரமேஷ், நகர்மன்ற தலைவர் சுந்தரலட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் நகர் மன்ற தலைவர் சிவப்பிரகாசம், தி.மு.க. நகர செயலாளர் மணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சாகுல் அமீது, விஜயகுமார், ஒன்றிய செயலாளர்கள் பாலகணேஷ், பொன்ராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பாபுஜி, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் அழகு ராமானுஜம், நகர்மன்ற உறுப்பினர்கள் கோகுல், அப்துல் ரகுமான், தனலட்சுமி, மீனாட்சி, மாவட்ட பிரதிநிதிகள் வேலுச்சாமி, சிவசங்கரன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்