ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு- நாளை ஓட்டு எண்ணிக்கை
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் 450 போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.;
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் பதிவான ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்டுள்ள சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவத்தினர் மற்றும் 450 போலீசார் கொண்ட 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நாளை ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
இடைத்தேர்தல்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் எம்.எல்.ஏ.வாக இருந்த திருமகன் ஈவெரா கடந்த ஜனவரி 4-ந் தேதி திடீர் மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து ஜனவரி 18-ந் தேதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ.வான கே.எஸ்.தென்னரசு, தே.மு.தி.க. வேட்பாளராக எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன் உள்பட 77 பேர் போட்டியிட்டனர்.
வாக்குப்பதிவு
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடந்தது. வாக்குப்பதிவுக்கான நேரம் மாலை 6 மணிக்கு முடிந்தாலும் பல வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் காத்து இருந்ததால், டோக்கன் வழங்கப்பட்டு அனைவரும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
ராஜாஜிபுரம் வாக்குச்சாவடியில் மட்டும் இரவு 9 மணிவரை வாக்குப்பதிவு நடந்தது. தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதியில் 238 வாக்குச்சாவடிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் முறையாக சீல் வைக்கப்பட்டன.
வாக்கு எண்ணும் மையம்
பின்னர் வாக்குச்சாவடி அதிகாரிகளிடம் இருந்து போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை பெற்றுக்கொண்டு, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்றனர். அனைத்து ஓட்டுப்பெட்டிகளும் சித்தோட்டில் உள்ள அரசு என்ஜினீயரிங் கல்லூரி (ஐ.ஆர்.டி.டி.)-க்கு கொண்டு வரப்பட்டன. அங்கு ஏற்கனவே தயார் நிலையில் இருந்த ஓட்டுப்பெட்டி காப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உரிய இடங்களில் அந்தந்த எண் கொண்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டன. 238 வாக்குச்சாவடிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட தலா ஒரு கட்டுப்பாட்டு கருவி, தலா ஒரு வி.வி.பேட் கருவி, தலா 5 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
சீல் வைப்பு
தொடர்ந்து காப்பு அறையில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் சரியாக இயங்குவதை உறுதி செய்த பின்னர், காப்பு அறை சீல் வைத்து பூட்டப்பட்டது. அப்போது ஈரோடு மாவட்ட கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ், துணை போலீஸ் சூப்பிரண்டு சேகர் மற்றும் அரசியல் கட்சி முகவர்கள் முன்னிலையில் இந்த சீல் வைக்கும் பணி நேற்று அதிகாலை நடந்தது.
தொடர்ந்து சித்தோடு அரசு என்ஜினீரியங் கல்லூரி போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு கண்காணிப்பு கேமராக்கள் மூலமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நாளை (வியாழக்கிழமை) காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
5 அடுக்கு பாதுகாப்பு
துணை ராணுவப்படை வீரர்கள் தவிர தமிழ்நாடு சிறப்பு பாதுகாப்பு படை மற்றும் ஈரோடு மாவட்ட போலீசார் என்று 450 போலீசார் இந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் 2 அடுக்கு, துப்பாக்கி ஏந்தி ஆயுதப்படை போலீசார், தமிழ்நாடு சிறப்புப்படை போலீசார், மாவட்ட போலீசார் 3 அடுக்கு என மொத்தம் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் நேற்று வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் எச்.கிருஷ்ணனுண்ணி, தேர்தல் பொது பார்வையாளர் ராஜ்குமார் யாதவ் ஆகியோர் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. முன்னதாக அவர்கள் காப்பு அறை மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டனர்.
15 சுற்றுகள் எண்ணிக்கை
இதைத்தொடர்ந்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறியதாவது:-
வாக்கு எண்ணிக்கை மையம், காப்பு அறையை சுற்றி துணை ராணுவ வீரர்கள் 24 மணி நேர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். 48 கண்காணிப்பு கேமராக்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் பொருத்தப்பட்டு உள்ளன. இவை தவிர வாக்கு எண்ணும் மையத்துக்கு செல்லும் பாதையை கண்காணிக்க 450 போலீசார் பணியில் உள்ளனர். சுழற்சி அடிப்படையில் 150 பேர் வீதம் 3 சுற்றுகளாக இந்த பாதுகாப்பு பணி தொடரும். தேர்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் விரிவாக செய்யப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கையில் 100-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபடுகிறார்கள். 16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இவ்வாறு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறினார்.
கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி கே.சிவக்குமார், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முத்துக்கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள், வேட்பாளர்கள், முகவர்கள் கலந்து கொண்டனர்.