மீண்டும் இவர் தேவையா? கொரோனா காலத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்தவர் அ.தி.மு.க. வேட்பாளர்- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கு

கொரோனா நேரத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்து விட்டு வீட்டுக்குள் இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் மீண்டும் தேவையா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.

Update: 2023-02-25 23:24 GMT

கொரோனா நேரத்தில் மக்களை சந்திக்காமல் விரட்டி அடித்து விட்டு வீட்டுக்குள் இருந்த அ.தி.மு.க. வேட்பாளர் மீண்டும் தேவையா? என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கி பேசினார்.

இறுதி கட்ட பிரசாரம்

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தமிழக முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று மாலை இறுதி கட்ட பிரசாரம் மேற்கொண்டார்.

ஈரோடு முனிசிபல் காலனியில் கருணாநிதி சிலை பகுதி மற்றும் பெரியார் நகரில் பிரசாரம் மேற்கொண்டு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு கை சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.

பெரியாரின் பேரன்

அப்போது அவர் கூறியதாவது:-

பெரியார் பிறந்த மண்ணில் பெரியார் பெயரில் அமைந்து உள்ள பெரியார் நகரில் நின்று கொண்டு பெரியாரின் பேரனுக்காக நான் கை சின்னத்தில் வாக்கு சேகரிக்க உங்களை தேடி நாடி வந்திருக்கிறேன். பெரியார் பிறந்த மண், அண்ணா வாழ்ந்த மண், கருணாநிதியின் குருகுலம் இந்த மண்.

கருணாநிதி மறைவுக்கு பிறகு, சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல் சிலை அமைக்கப்பட்டது. 2-வது சிலையை எங்கே வைப்பது? என்று சிந்தித்தபோது, அவரது குருகுலத்தில்தான் வைக்கவேண்டும் என்று ஈரோடு மாவட்ட செயலாளர் சு.முத்துசாமி அந்த பணியை செய்து முடித்தார். அந்த பெருமைக்கு உரிய ஈரோட்டில், பெரியாரின் அண்ணன் மகன் சொல்லின் செல்வர் ஈ.வி.கே.சம்பத்தின் மைந்தர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு, கலைஞரின் மைந்தன் நான் வாக்கு கேட்டு வந்திருக்கிறேன்.

கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா இந்த தொகுதிக்காக சட்டமன்றத்தில் பேசியவை இன்னும் அவைக்குறிப்பில் உள்ளன. அதுமட்டுமின்றி, முதல்-அமைச்சராகிய என்னையும், மற்ற அமைச்சர்களையும் சந்தித்து இந்த தொகுதிக்கு தேவையான பல திட்டங்களை கேட்டு பெற்றார். அவை நடந்து வரும் தருவாயில் முழுமையாக நிறைவேற்ற முடியாமல் மறைந்துவிட்டார். அவருக்கு எங்களிடம் இருந்த உரிமையை விட ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு உரிமை அதிகம். அதை பயன்படுத்தி, அத்தனை திட்டங்களையும் அவர் நிறைவேற்றுவார்.

அ.தி.மு.க. வேட்பாளர்

இங்கே எதிர் அணியில் நிற்கும் அ.தி.மு.க. வேட்பாளர் கடந்த 2 ஆண்டுகள் கொரோனா வாட்டியபோது, மக்கள் மிகுந்த சிரமத்தில் இருந்தபோது மக்களை சந்திக்க மறுத்து துரத்தி அடித்தவர். வீட்டை பூட்டிக்கொண்டு இருந்த அவர் மீண்டும் தேவையா?.

அதேநேரம் தி.மு.க.ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை தொடங்கி, மக்களுக்கு தேவையான மருந்து, உணவு என்று அத்தனை வசதிகளையும் செய்து கொடுத்தோம். ஈரோட்டில் மாவட்ட செயலாளரும், இன்றைய அமைச்சருமான முத்துசாமி தலைமையில் கூட்டணி கட்சியினர் இணைந்து இந்த பணியை நிறைவாக செய்தோம்.

கூட்டணி

நமது கூட்டணி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி. நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்தோம். சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், இந்த இடைத்தேர்தல் என கூட்டணி தொடர்கிறது. இன்னும் வரும் தேர்தல்களிலும் தொடரும். ஏன் என்றால் இது தேர்தலுக்கான கூட்டணி அல்ல. கொள்கை அளவிலான கூட்டணி. தி.மு.க., காங்கிரஸ், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, விடுதலை சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி இன்னும் நமது கூட்டணி கட்சிகள் ஒருங்கிணைந்து களத்தில் நிற்கிறோம். மொழியை காக்க, இனம்காக்க, நாட்டின் ஒற்றுமையை பாதுகாக்க என்று இணைந்திருக்கிறோம்.

எதிர் அணியில் ஒரு கூட்டணி உள்ளது. இங்கு போட்டியிடும் வேட்பாளர் கூட்டணியில் உள்ள கட்சி தலைவரான பிரதமர் மோடியின் படத்தையோ, பெயரையோ எங்கேயும் உச்சரிக்க மாட்டார். அப்படி போட்டால் ஓட்டு கிடைக்காது என்று அவர்களுக்கு தெரியும். இனி படம் போட்டாலும் கேட்டாலும் ஒன்றும் ஆகப்போவது இல்லை. வெற்றிபெறப்போவது ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன். இப்போது இங்கே பார்க்கிறபோதே இது வெற்றிக்கூட்டமாக உள்ளது. இதை ஆணவத்துடன் கூறவில்லை. துணிவுடன், தெம்புடன் உரிமையுடன் கூறுகிறேன்.

உரிமைத்தொகை தேதி

தேர்தல்நேரத்தில் நான் கூறியவற்றில் 85 சதவீதம் நிறைவேற்றிவிட்டோம். குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை எங்கே என்று எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டே இருந்தார். பல முறை அதற்கு பதில் கூறிவிட்டோம். நீங்கள் கஜானாவை காலியாக்கி, கொள்ளை யடித்துக்கொண்டு, கடனாக வைத்துவிட்டு சென்றதால், உடனடியாக எங்களால் ரூ.1000 வழங்க முடியவில்லை.

ஆனால் நீங்கள் கேட்டதால் பதில் அளித்தேன். உடனே தேர்தல் விதிமுறை மீறல் என்று புகார் கொடுத்து இருக்கிறீர்கள். இது ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டம். எனவே உறுதியாக கம்பீரத்துடன் கூறுகிறேன், மார்ச் 2-வது வாரம் பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கான உரிமைத்தொகை எந்த தேதியில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்படும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்