ஈரோடு வீதிகளில் நடந்து சென்று வாக்குகள் சேகரித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்- தொண்டர்களுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்ததுடன், தொண்டர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.
ஈரோட்டில் தேர்தல் பிரசாரத்துக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீதிகளில் நடந்து சென்று வாக்கு சேகரித்ததுடன், தொண்டர்களுடன் செல்பி எடுத்தும் மகிழ்ந்தார்.
வீதியில் நடந்து சென்றார்
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று நடந்த இறுதி கட்ட பிரசாரத்தில், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். சம்பத் நகரில் பிரசாரம் செய்து கை சின்னத்துக்கு வாக்குகள் கேட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து பெரியவலசு, பாரதி தியேட்டர், சத்தி ரோடு பஸ் நிலையம் வழியாக பொதுமக்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தபடி திறந்த வேனில் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனுடன் சென்றார்.
பஸ் நிலையம் கடந்து சத்தி ரோட்டில் வேன் சென்றபோது திடீர் என்று வேனை நிறுத்தக்கூறிய முதல்-அமைச்சர் வேனில் இருந்து இறங்கி நடுரோட்டில் நடந்து சென்று பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தார். முதல்-அமைச்சருடன் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அமைச்சர் சு.முத்துசாமி ஆகியோரும் சாலையில் இறங்கி நடந்தனர்.
செல்பி
முதல்-அமைச்சர் தொண்டர்களை பார்த்து உற்சாகம் அடைந்தது அவர்களிடம் 2 கைகளாலும் வணக்கம் செலுத்தியும், கை சின்னத்தை குறிப்பிடும் வகையில் கைகளை உயர்த்தியும் வாக்குகள் சேகரித்தார். முதல்-அமைச்சர் தங்கள் வீதியில் வருவதை பார்த்த தொண்டர்கள் பலரும் அவருடன் செல்பி எடுக்க ஆசைப்பட்டனர். அவர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினும் மகிழ்ச்சியுடன் செல்பி எடுத்தனர். சத்தி ரோடு முதல் மஜீத் வீதிவரை அவர் வீதியில் நடந்து சென்று வாக்குகள் சேகரித்தார். முதல்-அமைச்சரின் இந்த அதிரடி பிரசாரம் பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதுபோல் முதல்-அமைச்சர் பிரசாரம் செய்த வீதிகளில் பொதுமக்கள் வண்ணக்கோலங்கள் போட்டு அவரை வரவேற்றனர்.
பிரசாரம்
பின்னர் கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் பேசிய அவர், அங்கிருந்து கே.என்.கே.ரோடு, மூலப்பட்டறை, பவானி ரோடு வழியாக பி.பி.அக்ரகாரம் பகுதிக்கு சென்று பிரசாரம் செய்தார். பின்னர் பூம்புகார் நகர், காந்தி நகர், வில்லரசம்பட்டி வழியாக விருந்தினர் இல்லத்துக்கு சென்றார்.
மாலையில் மீண்டும் பிரசாரத்தை தொடங்கிய முதல்-அமைச்சர் சம்பத் நகர், இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி வழியாக முனிசிபல்காலனி வந்தார். அங்கு கருணாநிதி சிலை வளாகம் பகுதியில் பொதுமக்களிடம் பேசி வாக்குகள் சேகரித்தார். தொடர்ந்து மேட்டூர் ரோடு, பன்னீர்செல்வம் பூங்கா வழியாக பெரியார் நகர் பகுதியில் பிரசாரம் செய்தார்.
வரவேற்பு
நேற்று முதல்-அமைச்சர் பேசிய அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர். கட்சி கொடிகள், பலூன்களை கட்டி எடுத்து வந்து உற்சாகமாக முதல்-அமைச்சரை வரவேற்றனர்.
பகல் நேரத்தில் அவர் பிரசாரம் செய்த இடங்களில், சாலையிலேயே பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டு பொதுமக்கள் நிழலில் நிற்கவும், முதல்-அமைச்சர் அதன் நடுவில் நின்று பேசும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், பந்தலை தாண்டியும் பல ஆயிரம்பேர் வெயிலையும் பொருட்படுத்தாமல் முதல்-அமைச்சரை பார்த்து அவரது பேச்சை கேட்டனர்.