சாதாரண ஸ்டாலின் அல்ல, நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்- பிரசாரத்தில் கர்ஜித்த முதல்-அமைச்சர்

சாதாரண ஸ்டாலின் அல்ல, நான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்- பிரசாரத்தில் கர்ஜித்த முதல்-அமைச்சர்

Update: 2023-02-25 22:51 GMT

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் நேற்று பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. ஆட்சியின் சாதனைகளை அடுக்கினார். அப்போது அவர், எம்.ஜி.ஆர். ஆட்சியில் ஒரு பைசா குறைக்க கேட்டு போராட்டம் நடத்திய விவசாயிகளுக்கு 1989-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஒரு பைசா கூட தரவேண்டாம் என்று இலவச மின்சாரம் வழங்கியவர் கருணாநிதி. அந்த திட்டத்தை கெடுக்க முயற்சிகள் செய்தவர்கள் அ.தி.மு.க.வினர். இப்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் இதுவரை 1½ லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சார இணைப்பு வழங்கி இருக்கிறோம்.

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டியை உலகத்திலேயே எந்த நாடும் நடத்திடாத அளவுக்கு சிறப்பாக நடத்தி இந்தியாவுக்கே பெருமை தேடி தந்தோம். தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதி எம்.எல்.ஏ.க்களும் ஆண்டுக்கு 10 முக்கிய கோரிக்கைகளை அளித்து அதை நிறைவேற்றும் திட்டத்தை நிறைவேற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நான் மட்டும் முதல்வனாக இருந்தால் போதாது. தமிழ்நாட்டின் ஒவ்வொரு இளைஞர்-இளம்பெண்களும், மாணவ-மாணவிகளும் தொழில், கல்வி, தங்கள் துறைசார்ந்த பணியில், வாழ்க்கையில் சமூகத்தில் முதல்வனாக வரவேண்டும் என்று நான் முதல்வன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலின் பட்டியலிட்டு பேசினார்.

தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியவற்றை 100 சதவீதம் நிறைவேற்றி விட்டது என்று நான் கூறி ஏமாற்ற மாட்டேன். 85 சதவீதம் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் ஒரு வாக்குறுதியை நீங்கள் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மார்ச் மாதம் பட்ஜெட்டில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தேதியுடன் அறிவிப்பேன்.

சொல்வதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்று எங்கள் தலைவர் கருணாநிதி சொல்வார். நான், சொல்வதை செய்வோம், செய்வதையும் சொல்வோம், சொல்லாதையும் செய்வோம் என்று சொல்லாதவற்றையும் செய்து கொண்டே இருப்பேன். நான் ஸ்டாலின், சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்று கர்ஜித்தார்.

இதைக்கேட்ட அனைத்து மக்களும் உற்சாகத்துடன் கைகளை தட்டியும், வாழ்த்து கோஷங்கள் எழுப்பியும் வாழ்த்தினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்