தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் ஈரோடு மாநகராட்சிக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவார்- ஈரோட்டில் பிரேமலதா பேச்சு

தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவார் என ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

Update: 2023-02-20 22:07 GMT

தே.மு.தி.க. வேட்பாளர் வெற்றி பெற்றால் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவார் என ஈரோட்டில் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

துணை ராணுவம்

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து தே.மு.தி.க. மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் நேற்று 2-வது நாளாக ஈரோடு பி.பி.அக்ரஹாரம், கள்ளு பிள்ளையார் கோவில் வீதி, திருநகர் காலனி ஆகிய பகுதிகளில் திறந்த வேனில் நின்றபடி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு முரசு சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார்.

அப்போது அவர் பொதுமக்களிடையே பேசும்போது கூறியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதியில் எங்கு பார்த்தாலும் துணை ராணுவபடை நிற்கிறார்கள். இவர்கள் என்ன வேலை செய்கிறார்கள். துணை ராணுவ படை எதற்கு தமிழ் நாட்டுக்கு வரவேண்டும். இவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி எதுவும் தெரியாது. இந்த தொகுதியை பற்றியும் தெரியாது. தமிழ் பேசவும் தெரியாது. இங்குள்ள மக்களை பற்றியும் ஒன்றும் தெரியாது. தொப்பியை மாட்டிக்கொண்டு வரும் வண்டியை பார்ப்பதற்கு லட்சக்கணக்கில் செலவு செய்து அவர்களை ஏன் இங்கு கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை. அவர்கள் எதையும் கண்டுகொள்வதில்லை.

நல்லது செய்ய வேண்டும்

விஜயகாந்த் நலமாக இருக்கிறாரா? என்று நீங்கள் அனைவரும் கேட்கிறீர்கள். அவர் நலமாக உள்ளார். மீண்டும் பழைய விஜயகாந்தை நீங்கள் பார்க்க வேண்டும் என்றால் ஈரோடு கிழக்கு தொகுதியில் அவரை வெற்றிபெற வைக்க வேண்டும். நீங்கள் கொடுக்கும் வெற்றி அவருக்கு 100 ஆண்டுகள் தெம்பை கொடுக்கும்.

அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்றால் என் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும். அவர்களுக்காக உழைக்க வேண்டும். வறுமை கோட்டுக்கு கீழே யாரும் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்று தான் நினைத்து கொண்டு இருக்கிறார். இந்த தொகுதியில் நீங்கள் அவருக்கு வெற்றியை கொடுத்தால் பழைய விஜயகாந்தாக அவர் உங்கள் முன் வந்து நிற்பார்.

அடிப்படை வசதிகள்

சாயப்பட்டறை கழிவுநீரால் ஈரோடு மாநகர் பகுதியில் குடிநீர் பாதிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் மாநகர் பகுதியில் சாலை வசதி, சாக்கடை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் சரியில்லை. நம்முடைய வேட்பாளர் வெற்றி பெற்றால் ஈரோடு மாநகராட்சி பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் வழங்குவார். அடிப்படை வசதிகளை மேம்படுத்துவார்.

இந்த தொகுதியில் விஜயகாந்த் நேரடியாக போட்டியிடுவதாக நினைத்து நீங்கள் அனைவரும் முரசு சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.

அப்போது அவருடன் மாநில துணைச்செயலாளர்கள் எல்.கே.சுதீஷ், பார்த்தசாரதி, அவைத்தலைவர் இளங்கோவன், கொள்கை பரப்பு செயலாளர் மோகன்ராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்