தாட்கோ மூலம்ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் குறித்த பயிற்சி ஆன்லைன் மூலம் அளிக்கப்பட உள்ளது.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
ஆன்லைன் பயிற்சி
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன்படி 12-ம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு டி.சி.எஸ். ஐ.ஓ.என் நிறுவனத்துடன் இணைந்து தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக பல்வேறு பயிற்சிகள் ஆன்லைன் மூலம் அளிக்கப்பட உள்ளன. இந்த பயிற்சி பெற்றவர்கள் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட உள்ளது.
தகுதிகள்
தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியை பெற பி.இ, பி.டெக், பி.சிஏ, பி.எஸ்சி (கம்ப்யூட்டர் அறிவியல்), பி.எஸ்சி (கம்ப்யூட்டர் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம்), எம்.சி.ஏ, எம்.எஸ்சி (கம்ப்யூட்டர் அறிவியல்) ஆகிய பட்டப்படிப்புகள் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த மாணவர்கள் அல்லது கல்லூரிகளில் இறுதி ஆண்டு படித்து வரும் 18 முதல் 28 வயது நிரம்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். அனிமேசன் பயிற்சி பெற்ற 12-ம் வகுப்பு அல்லது ஐ.டி.ஐ. தேர்ச்சி பெற்ற 18 முதல் 28 வயது நிரம்பிய மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இணையதளத்தில் பதிவு
மேலும் டி.சி.எஸ் நிறுவனத்தால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு முறையானது ஆங்கில வழியில் டி.சி.எஸ். நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தேர்வு மையங்களான சென்னை, கோவை, மதுரை, சேலம் மற்றும் நெல்லை ஆகிய தேர்வு மையங்களில் நடைபெறும். இந்த தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறும் பட்சத்தில் டி.சி.எஸ். நிறுவனத்தால் வழங்கப்படும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் அனிமேஷன் சம்பந்தப்பட்ட பயிற்சியில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் சேர்ந்து பயிற்சி பெறலாம். இந்த பயிற்சி பெற www.tahdco.comஎன்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். பயிற்சிக்கான கட்டணத்தை தாட்கோ வழங்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.