தூத்துக்குடியில் இருந்து கப்பல் மூலம் இலங்கைக்கு 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை, அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.;
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களை, அமைச்சர்கள் கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
நிவாரண பொருட்கள்
இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவு பொருள் தட்டுப்பாட்டில் சிக்கி தவித்து வரும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தமிழக மக்கள் சார்பில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனால் ரூ.80 கோடி மதிப்பில் 40 ஆயிரம் டன் அரிசி, ரூ.28 கோடி மதிப்பிலான உயிர்காக்கும் மருந்து பொருட்கள், ரூ.15 கோடி மதிப்பிலான குழந்தைகளுக்கு வழங்கும் 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை அனுப்பி வைக்க சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, முதல் கட்டமாக சென்னையில் இருந்து ரூ.30 கோடி மதிப்பிலான 9 ஆயிரத்து 45 டன் அரிசி, ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 50 டன் ஆவின் பால் பவுடர், ரூ.1 கோடியே 44 லட்சம் மதிப்பில் 8 டன் மருந்து பொருட்கள் ஆகியவை அடங்கிய தொகுப்பை கப்பல் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.
15 ஆயிரம் டன் பொருட்கள்
இதன் தொடர்ச்சியாக நேற்று 2-வது கட்டமாக தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
நிகழ்ச்சிக்கு அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ரூ.67 கோடியே 70 லட்சம் மதிப்பலான 15 ஆயிரம் டன் நிவாரண பொருட்களுடன் புறப்பட்ட கப்பலை கொடியசைத்து அனுப்பி வைத்தனர்.
3-வது கட்டமாக...
பின்னர் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் கூறியதாவது:-
சட்டமன்றத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தபடி முதல் கட்டமாக சென்னையில் இருந்து ரூ.46 கோடி மதிப்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 2-வது கட்டமாக தூத்துக்குடியில் இருந்து வி.டி.சி. சன் என்ற சரக்கு கப்பல் மூலம் ரூ.48 கோடியே 30 லட்சம் மதிப்பிலான 14 ஆயிரத்து 712 டன் அரிசி, ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான 250 டன் ஆவின் பால் பவுடர், ரூ.11 கோடியே 90 லட்சம் மதிப்பிலான உயிர் காக்கும் மருந்து பொருட்கள் ஆக மொத்தம் ரூ.67 கோடியே 70 லட்சம் மதிப்பிலான 15 ஆயிரம் டன் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. இலங்கையில் இருந்து அவர்கள் கேட்கும் தேதிகளில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றன. தொடர்ந்து 3-வது கட்டமாக நிவாரண பொருட்கள் விரைவில் அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, எம்.எல்.ஏ.க்கள் சண்முகையா (ஓட்டப்பிடாரம்), மார்க்கண்டேயன் (விளாத்திகுளம்), வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.