முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி

முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி செய்யப்பட்டது.

Update: 2023-10-10 00:06 GMT

முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக ஆசை வார்த்தை கூறி ராணுவ வீரர்களிடம் ரூ.1,200 கோடி மோசடி செய்த தனியார் நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, ஈரோடு கலெக்டர் அலுவலகம் முன்பு உருண்டு, புரண்டவர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

ராணுவ வீரர்கள்

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறி இருந்ததாவது:-

ஈரோட்டை சேர்ந்த ஒரு தனியார் நிறுவனத்தினர் எங்களை தொடர்பு கொண்டு, எங்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக பணம் தருவதாக ஆசைவார்த்தை கூறினர். அதன்படி ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் 2 தவணைகளாக ரூ.9 ஆயிரம் வீதம் ஒரு மாதத்துக்கு ரூ.18 ஆயிரம் என கணக்கிட்டு 10 மாதங்களுக்கு ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் திருப்பி கொடுப்பதாக கூறினர். இதேபோல் ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 10 மாதங்களில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரமும், ரூ.5 லட்சம் முதலீடு செய்தால் 18 மாதங்களில் ரூ.15 லட்சமும், ரூ.25 லட்சம் முதலீடு செய்தால் 5 ஆண்டுகளில் ரூ.83 லட்சம் தருவதாகவும் கூறினர்.

ரூ.1,200 கோடி

அதை நம்பி நாங்களும், எங்களை போல் ஆயிரக்கணக்கானவர்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தோம். முதல் 2 மாதங்கள் மட்டும் அவர்கள் கூறியபடி, பணத்தை கொடுத்தனர். அதன்பின்னர் கடந்த 2 ஆண்டுகளாக அந்த நிறுவனத்தினர் பணம் கொடுக்கவில்லை.

பல முறை கேட்டும், வாட்ஸ் அப்பில் ஆடியோ, வீடியோ மட்டும் அனுப்பி இந்த மாதம் தருகிறோம், அடுத்த மாதம் தருகிறோம் என பதில் சொல்லி சமாளித்து வருகின்றனர். இதுகுறித்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, எங்களிடம் ஏமாற்றப்பட்ட தொகை சுமார் ரூ.1,200 கோடியை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்தனர்.

மோதல் ஏற்படும் சூழ்நிலை

இதற்கிடையில் மனு கொடுக்க வந்த ஒரு குழுவினர் 'நாங்கள் சிலரை நம்பி பணம் கொடுத்திருந்தோம். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தரவேண்டும்' என கோரிக்கை விடுத்திருந்தனர். அதற்கு மற்றொரு குழுவினர், 'நாங்களும் பணம் கொடுத்து ஏமாந்துள்ளோம், அந்த நிறுவன உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்து மனு அளிக்கவே வந்துள்ளோம்' என கூறினர்.

ஒருகட்டத்தில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது முதலாவதாக மனு கொடுத்த வந்திருந்தவர்களில் பெண் ஒருவர் திடீரென கதறி அழுதார். அவருடன் வந்த பெண்களும், மற்றொரு குழுவினரை நோக்கி பணத்தை உடனடியாக திருப்பித்தரும்படி கூச்சலிட தொடங்கினர்.

ரோட்டில் உருண்டு, புரண்டு...

இதனால், இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து அனுப்பி வைக்க முயன்றனர். எனினும் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயில் முன்பு இருதரப்பினரும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஒரு ஆணும், பெண்ணும் திடீரென ரோட்டில் படுத்து உருண்டு, புரண்டு அழுது, தங்களது பணத்தை மீட்டுத் தந்தால்தான் இங்கிருந்து வீட்டுக்கு செல்வோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் அவர்களை அழைத்துப்பேசி, இதுகுறித்து நீங்கள் பொருளாதார குற்றப்பிரிவில் மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறி அவர்களை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் காரணமாக ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்