தோட்டக்கலைத்துறை மூலம் விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் பனை விதைகள்
விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் மற்றும் பனமரக்கன்றுகள் வழங்கப்பட உள்ளது.
பனை சாகுபடி
தமிழ்நாட்டின் மாநில மரம் பனை. கடும் வறட்சியை தாங்கி வளரக்கூடிய மரம் இது. இந்த மரத்தின் அனைத்து பகுதிகளும் பயன்தரக்கூடியது. பனை மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய பதனீர், நுங்கு மற்றும் பதனீரில் இருந்து தயாரிக்கப்படும் கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்றவை மருத்துவ குணமுடையது. பனை மரத்தின் ஓலைகள் பெட்டி, கூடை, கொட்டான், விசிறி, முறம், தட்டு, தொப்பி போன்ற கைவினைப் பொருட்கள் தயாரிக்க பயன்படுகிறது.
இத்தகைய சிறப்பு மிக்க பனை மரத்தின் சாகுபடியை ஊக்குவிப்பதற்கும், பனை சாகுபடி செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், தேனி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை மூலம் 2023-24-ம் நிதியாண்டில் பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ் 100 சதவீத மானியத்தில் பனை விதைகள் மற்றும் பனை மரக்கன்றுகள் வினியோகம் செய்யப்பட உள்ளது.
30 ஆயிரம் விதைகள்
மாவட்டத்தில் 30 ஆயிரம் பனை விதைகள், 250 கன்றுகள் மானியத்தில் வினியோகம் செய்வதற்கு ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 50 விதைகள் மற்றும் 10 கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்பட உள்ளது. பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சி நிர்வாகங்கள் மூலம் நடுவதற்கு அதிகபட்சமாக 100 விதைகள், 30 கன்றுகள் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம். அல்லது என்ற www.tnhorticulture.tn.gov.in/tnhortnet/registration இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். இத்தகவலை தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.