இடைத்தேர்தல் எதிரொலி:வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது

ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது

Update: 2023-01-24 19:30 GMT

இடைத்தேர்தல் காரணமாக வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஈரோடு ஜவுளிச்சந்தை வெறிச்சோடியது.

ஜவுளிச்சந்தை

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா பகுதியில் வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்க்கிழமை முழுவதும் ஜவுளிச்சந்தை செயல்படும். இதில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள் கடைகள் அமைத்து ஜவுளியை விற்பனை செய்வார்கள். தமிழ்நாடு மட்டுமின்றி வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வந்து ஜவுளியை மொத்தமாக வாங்கி செல்கிறார்கள். இதனால் ஜவுளிச்சந்தையில் விற்பனை அமோகமாக காணப்படும்.

இந்தநிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளதால், உரிய ஆவணம் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணத்தை எடுத்து செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. வாக்காளர்களுக்கு பணபட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கும் வகையில் 3 நிலை கண்காணிப்பு குழுக்களும், 3 பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளன.

வெறிச்சோடியது

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், நேற்று கூடிய சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை மிகவும் குறைவாக காணப்பட்டது. வழக்கமாக பல லட்சம் ரூபாய் கொண்டு வந்து ஜவுளியை வாங்கி செல்லும் வியாபாரிகள், தேர்தல் காரணமாக ஜவுளி வாங்க வருவதை தவிர்த்தனர். இதனால் ஜவுளிச்சந்தை வெறிச்சோடியே காணப்பட்டது.

சந்தைக்கு வந்திருந்த வியாபாரிகளும் குறைந்த மதிப்பிலான ஜவுளியை மட்டுமே வாங்கி சென்றார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்