ஜி-20 மாநாட்டில் இடம் பெற்றதன் மூலம் 'பாரத்' என்ற வார்த்தை உலக அளவில் இந்தியாவை இன்னும் உயர்த்தி உள்ளது- அண்ணாமலை பேட்டி

ஜி-20 மாநாட்டில் இடம் பெற்றதன் மூலம் ‘பாரத்’ என்ற வார்த்தை உலக அளவில் இந்தியாவை இன்னும் உயர்த்தி உள்ளது என அண்ணாமலை கூறினார்.

Update: 2023-09-09 21:45 GMT

 உசிலம்பட்டி,

ஜி-20 மாநாட்டில் இடம் பெற்றதன் மூலம் 'பாரத்' என்ற வார்த்தை உலக அளவில் இந்தியாவை இன்னும் உயர்த்தி உள்ளது என அண்ணாமலை கூறினார்.

நினைவிடத்தில் அஞ்சலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரில் உள்ள வீரதியாகிகள் நினைவிடத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதை தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பெருங்காமநல்லூர் மக்கள், குற்ற பரம்பரை சட்டத்திற்கு எதிராக ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடி துப்பாக்கிக் குண்டுகளுக்கு பலியாகினர். ஆங்கிலேயர்களால் 16 பேர் சுட்டுக் படுகொலை செய்யப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டது. ஆனால் நூற்றுக்கு மேற்பட்டோர் இறந்ததாக இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு இணையாக நடத்தப்பட்ட இந்த படுகொலை சம்பவம் இந்தியா முழுவதும் அனைவருக்கும் தெரியும். இதை நினைவுகூரும் விதமாக பெருங்காமநல்லூர் தியாகிகள் போராட்டத்தை அடையாளச் சின்னமாக அமைக்க பிரதமர் மோடி மற்றும் மந்திரிகளிடம் வலியுறுத்துவேன்.

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியின் இருக்கையில் பாரத் இடம் பெற்றதற்கு எதிர்க்கட்சிகள் சர்ச்சையை கிளப்புகின்றன. இதில் சர்ச்சை ஒன்றும் கிடையாது. அதில் தவறில்லை.

பாரத், பாரத தேசம் என்று ஏற்கனவே நாம் அழைத்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்தியா என்றால் பாரதம் என்று ஏற்கனவே பதிவேட்டில் உள்ளது. பாரதம் என்ற பெயர் இந்த தேசத்து மக்கள் யார் என்பதை அடையாளப்படுத்துகிறது. தமிழக கலாசாரத்தில் பாரதம் என்று ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. பண்டைய கலாசாரத்திலும் பாரத தேசம் என்றுதான் உள்ளது.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர்

பாரத் என்ற வார்த்தை உலக அளவில் இந்தியாவை உயர்த்தி காட்டியுள்ளது. எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக இதை பேசி வருகின்றன. பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிறந்த மனிதர். தன்னுடைய சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு பிரித்துக் கொடுத்தார். இந்திய அளவில் பேசப்படக்கூடிய ஒருவர்தான் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர். அவரது பெயரை மதுரை விமான நிலையத்திற்கு வைப்பது ஒன்றும் தவறில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மாவட்ட தலைவர் சசிக்குமார், மாவட்ட பார்வையாளர் ராஜரத்தினம், மாவட்ட செயலாளர் உதயச்சந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் பொன்.கருணாநிதி, பொருளாளர் ஞானப்பழம், உசிலம்பட்டி நகர் தலைவர் போஸ், சேடபட்டி ஒன்றிய செயலாளர் சாந்தகுமார், யாத்திரை பொறுப்பாளர் வக்கீல் காசிமாயன், மாவட்டத் துணைத் தலைவர் தீபன் முத்தையா, மகளிர் அணி செயலாளர் மலர்கொடி, மாநில விவசாய அணி பிரிவு தர்மராஜா உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்