சிறுமலையில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுப்பு பணி
சிறுமலையில் பட்டாம்பூச்சிகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி, 4 நாட்கள் நடக்கிறது.
தமிழகத்தில் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தநிலையில் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை வனப்பகுதிக்கு, மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து பல வகை பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்ந்து வந்த வண்ணம் உள்ளன. இதனால் சிறுமலையில் உள்ள பட்டாம்பூச்சி வகைகளின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்து இருக்கிறது. இதையடுத்து அவற்றை கணக்கெடுக்கும் பணி இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. மாவட்ட வன அலுவலர் பிரபு அறிவுரையின்படி 50 பேரை கொண்ட குழுவினர் பட்டாம்பூச்சிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த குழுவினர் 9 குழுக்களாக பிரிந்து சிறுமலை வனப்பகுதியின் வெவ்வேறு பகுதிகளில் கணக்கெடுப்பை நடத்த உள்ளனர். இந்த கணக்கெடுப்பு பணி நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை நடைபெற இருக்கிறது. பட்டாம்பூச்சி இனங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. இதற்கிடையே அவற்றை மீட்டு பாதுகாக்கும் வகையில் சிறுமலையில் முதன்முறையாக கணக்கெடுப்பு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.