திருவேங்கடம் அருகே பரபரப்பு; குளத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய கிராம மக்கள்

திருவேங்கடம் அருகே குளத்தில் குடியேறும் போராட்டம் நடத்திய கிராம மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2022-11-29 18:45 GMT

திருவேங்கடம்:

திருவேங்கடம் அருகே உள்ள செவல்குளம் கிராமம் கோபாலகிருஷ்ணாபுரம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வாறுகால் இல்லாததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்பட்டு வந்தது. இதனால் அங்கு பிரதான சாலையில் வாறுகால் கட்டி, ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் கழிவுநீரை விட திட்டமிடப்பட்டது. அதன்படி அங்கு வாறுகால் அமைக்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தூரத்திற்கு பிறகு தனக்கு சொந்தமான நிலம் இருப்பதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் வாறுகால் கட்ட ஆட்சேபம் தெரிவித்தார்.

இதனால் கோபாலகிருஷ்ணாபுரம் மக்கள் நிலத்தை அளந்து வாறுகாலை நீட்டித்து தரக்கோரி திருவேங்கடம் தாசில்தார் மற்றும் உதவி கலெக்டரிடம் மனு அளித்தனர். ஆனால் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் கோபாலகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் ஊருக்கு வெளியே உள்ள குளத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கேயே உணவு சமைத்து ஆண்களும், பெண்களும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் வருவாய் துறையினர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்