தேனி அருகே பரபரப்பு: வீட்டு முன்பு சத்தம் போட்டதை கண்டித்த வியாபாரி அடித்து கொலை

தேனி அருகே வீட்டின் முன்பு சத்தம் போட்டதை கண்டித்த வியாபாரியை அடித்து கொலை செய்த 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-29 15:04 GMT

மரக்கடைக்காரர்

தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டி பள்ளிவாசல் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (வயது 61). இவர் மரக்கடை வைத்திருந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தனது வீட்டில் இருந்தார். அப்போது அவருடைய வீட்டுக்கு அருகே, காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுகுமார் (19), அமராவதி பள்ளி தெருவை சேர்ந்த கபில் (21), சேவாக் (19), அஜித் (20) ஆகியோர் நின்று சத்தமாக பேசி கொண்டு இருந்தனர்.

அந்த வாலிபர்கள் ஆபாச வார்த்தைகளுடன் சத்தமாக பேசியதால், பாண்டியன் அவர்களை கண்டித்தார். இதனால் அவருடன் அந்த வாலிபர்கள் தகராறு செய்தனர்.

இதையடுத்து அந்த 4 பேரும் சேர்ந்து பாண்டியனை கீழே தள்ளிவிட்டு சரமாரியாக தாக்கினர். அப்போது அங்கு வந்த சேவாக்கின் தந்தை சந்திரகுமாரும் பாண்டியனை கம்பால் தாக்கியதாக கூறப்படுகிறது.

அடித்து கொலை

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அங்கு வந்ததால் அவர்கள் அனைவரும் அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் இந்த தாக்குதலில் காயம் அடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். உடனே சிலர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

ஆம்புலன்ஸ் வருவதற்குள் அவர் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தேனி போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதிர், பழனிசெட்டிபட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

4 பேர் கைது

பின்னர் பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து அவருடைய மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில், பழனிசெட்டிபட்டி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்தனர்.

அந்த வழக்கில் சுகுமார், கபில், சேவாக், அஜித் ஆகிய 4 பேரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள சந்திரகுமாரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்