சத்தியமங்கலம் அருகே பரபரப்பு அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ.வை காரில் கடத்திய 6 பேர் கும்பல்; ரூ.1½ கோடி பறிப்பு

சத்தியமங்கலம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி ரூ.1½ கோடி பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-08-25 21:04 GMT

புஞ்சைபுளியம்பட்டி

சத்தியமங்கலம் அருகே முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி ரூ.1½ கோடி பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னாள் எம்.எல்.ஏ.

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே உள்ள புஜங்கனூர் பகுதியை சேர்ந்தவர் எஸ்.ஈஸ்வரன் (வயது 45). அ.தி.மு.க.வை சேர்ந்த இவர், கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை பவானிசாகர் தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தார்.

இந்தநிலையில் முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் தன்னை கடத்தியதாக புஞ்சைபுளியம்பட்டி போலீசில் நேற்று பரபரப்பு புகார் கொடுத்தார். அதன் விவரம் வருமாறு:-

புஜங்கனூரில் இருந்து நேற்று முன்தினம் மதியம் ஈஸ்வரன் தனது மோட்டார் சைக்கிளில் பவானிசாகரில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிக்கு சென்றார். அங்கிருந்து அவர் மீண்டும் வீடு திரும்புவதற்காக சத்தியமங்கலம்-மேட்டுப்பாளையம் சாலையில் மல்லியம்பட்டி பிரிவு பகுதியில் சென்றபோது அவருக்கு பின்னால் ஒரு கார் வந்து கொண்டு இருந்தது. ஈஸ்வரன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளை திடீரென வழிமறித்தப்படி அந்த கார் வந்து நின்றது.

காரில் கடத்தல்

அந்த காரில் இருந்து 6 பேர் கொண்ட கும்பல் திபுதிபுவென இறங்கியது. அவர்கள் ஈஸ்வரனின் கண்களை ஒரு துணியால் கட்டினார்கள். பின்னர் அவரை அந்த கும்பல் காரில் ஏற்றி கடத்தி சென்றது. இதையடுத்து மறைவான இடத்துக்கு அழைத்து சென்ற அந்த கும்பல் ஈஸ்வரனை விடுவிக்க ரூ.3 கோடி கேட்டு மிரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் ரூ.1½ கோடி பணத்தை கொடுத்து விடுவிக்கப்பட்டதாக முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரன் புஞ்சபைுளியம்பட்டி போலீசில் புகார் அளித்து உள்ளார்.

கடத்தல்காரர்கள் தாக்கியதில் படுகாயம் அடைந்த ஈஸ்வரன் சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.1½ கோடி

நான் வங்கிக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டு இருந்தேன். அப்போது காரில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் எனது கண்களில் துணியை கட்டிவிட்டு கடத்தியது. சுமார் அரை மணிநேரம் காரில் சென்ற பிறகு ஒரு வீட்டில் என்னை அடைத்து வைத்து அடித்து துன்புறுத்தினர். அதன்பிறகு இரவில் சத்தியமங்கலம் அருகே அரியப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த முன்னாள் அ.தி.மு.க. நிர்வாகி ஒருவர் என்னிடம் பேசினார். அவர் ரூ.3 கோடி கொடுத்தால் விட்டுவிடுவதாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது வீட்டில் உள்ள பணத்தை எடுத்து கொடுத்துவிடுவதாக நான் கூறினேன். இதையடுத்து மறுநாள் அதிகாலையில் அவர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றார். அப்போது வீட்டில் இருந்த ரூ.1½ கோடியை நான் கொடுத்தேன். இதையடுத்து அவர் என்னை வீட்டிலேயே விட்டு சென்றார்.

போலீஸ் விசாரணை

கடத்தல்காரர்கள் தாக்கியதில் எனது கால், முதுகு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்ந்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் ஈஸ்வரனுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக அவர் கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து புஞ்சைபுளியம்பட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முன்னாள் எம்.எல்.ஏ. ஈஸ்வரனை 6 பேர் கொண்ட கும்பல் காரில் கடத்தி ரூ.1½ கோடி பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்